கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
ஊட்டியை அடுத்துள்ள பைகமந்து கிராம பகுதியில் விவசாயிகளின் நிலங்களில் வெள்ளைப் பூண்டு அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் பல்வேறு மலை காய்கறி பயிர்களை விளைவிக்கும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டமாக விளங்குகிறது. இங்கு விளைவிக்கப்படும் காய்கறி பொருட்கள் பல்வேறு வெளி சந்தைகள் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் இருந்து கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ் ஆகியவை போலவே மலைப்பூண்டு விவசாயமும் அதிக அளவில் நடைபெறுகிறது. சிறந்த லாபமடையும் ஒரு தொழிலாகவும் பூண்டு விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது
இந்நிலையில் தற்போது ஊட்டியை அடுத்துள்ள பைகமந்து கிராம பகுதியில் விவசாயிகளின் நிலங்களில் வெள்ளைப் பூண்டு அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுமார் மூன்று மாத காலம் சிரமப்பட்டு விவசாயம் மேற்கொண்டு தற்பொழுது அறுவடை செய்யும் பொழுது மகிழ்ச்சியுடன் பணிகளில் ஈடுபடுகின்றனர். வெள்ளைப் பூண்டு ஒரு சில சமயங்களில் ரூபாய் நானூறு வரையிலும் ஒரு கிலோவிற்கு விற்பனையாகும். ஆனால் ஒரு சில சமயங்களில் 100 ரூபாய்க்கும் குறைவாக விற்பனை ஆவதால் குறிப்பிட்ட விலையை எதிர்பார்த்து விவசாயம் மேற்கொள்ள முடியாது. இருப்பினும் இந்த முறை நல்ல விலைக்கு பூண்டு விற்பனையாவதால் விவசாயிகள் ஆர்வத்துடன் அறுவடை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெள்ளைப்பூண்டு அறுவடை குறித்து விவசாயி சிவகுமார் தெரிவிக்கையில், வெள்ளைப்பூண்டு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி விலை விற்கும். எங்களது வெள்ளை பூண்டு 330 முதல் 400 ரூபாய் வரையிலும் விற்பனையாகி வருகிறது. இந்த முறை மழை குறைவால் சமாளித்து விட்டோம். இனிவரும் நாட்களில் மழையைப் பொறுத்து வெள்ளை பூண்டு விவசாயம் மேற்கொள்ள முடியும். இதற்கு முதலீடு அதிகமாக உள்ளதால் நல்ல விலையும் விற்றால் மட்டுமே சமாளிக்க முடியும். ஒரு ஏக்கருக்கு 7 லட்சம் முதல் 9 லட்ச ரூபாய் வரை முதலீடு செய்யப்படுகிறது. 300 ரூபாய்க்கு மேல் விற்பனையானால் 10 லட்சத்திற்கு மேலாக பணம் கிடைக்கும். இந்தக் காலகட்டங்களில் பூண்டு விளைச்சல் சிறப்பானதாக இருக்கும். பூண்டின் தரமும் சிறப்பாக இருக்கும் என தெரிவித்தார்.
உதகமண்டலம் (ஊட்டி), நீலகிரி, தமிழ்நாடு
ஏப்ரல் 25, 2026 12:25 PM IST