கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
சேலம் மாவட்டம் ஓமலூரில் ஆசைக்கு இணங்க மறுத்த தாய் மற்றும் தடுக்க வந்த மகனை வெட்டிக் கொன்ற நபர் தானும் மரத்தில தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தாயை வன்கொடுமை செய்ய வந்த நபரை தடுத்த 10 வயது சிறுவன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில், கொலை செய்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். பலத்த காயமடைந்த தாயும் சிகிச்சை பலனின்றி பலியானார்.
ஓமலூர் அருகே கணவரை பிரிந்து இளம் பெண் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். அவர் அங்கிருந்த ஷோரூம் ஒன்றில் பணியாற்றி வந்தார். அப்போது உடன் பணியாற்றிய சக்திவேல் என்பவருடன் பழகி வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு 2 மணியளவில் அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்த சக்திவேல், அவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த அந்த பெண்ணின் 10 வயது மகன், சக்திவேலை தடுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல், அந்த தாய் மற்றும் மகனை சரமாரியாக வெட்டியதாக தெரிகிறது. இதில் பலத்த காயம் அடைந்த சிறுவன், துடிதுடித்து உயிரிழந்தார். அந்த பெண்ணின் வலது கை துண்டிக்கப்பட்டு, தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதற்கிடையே, கொலை செய்துவிட்டு தப்பிய சக்திவேல், கருப்பூர் கோரிமேடு பகுதியில் மரத்தில் பெல்ட்டால் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டது தெரியவந்தது.
ஏப்ரல் 24, 2026 10:12 PM IST