மசூதிகளில் பெண்கள் நுழைய அனுமதி கோரி புனேவைச் சேர்ந்த யாஸ்மின் ஜுபெர் அகமது பீர்ஜாடே, அவரது கணவர் ஜுபெர் ஆகியோர் தாக்கல் செய்த மனுவின் மீது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விசாரணையின் போது, ‘‘உண்மைத் தன்மையைத் தெளிவுபடுத்திக் கொள்ளக் கேட்கிறோம். மசூதிக்குள் இஸ்லாமிய பெண்கள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்களா?’’ என்று தலைமை நீதிபதி சூர்யகாந்த் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த முஸ்லிம் தனிநபர் வாரியத்தின் மூத்த வழக்கறிஞர் எம்.ஆர்.ஷம்ஷாத்: இஸ்லாமிய பெண்கள் மசூதிக்குள் நுழைவதில் இஸ்லாமியப் பிரிவினரிடையே எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால், அங்கு பின்பற்றப்பட வேண்டிய சில ஒழுங்குமுறைகள், விதிகள் உள்ளன. அவர்கள் மசூதிக்குள் நுழையலாம் என்றாலும், ஆண்கள் செல்லும் பிரதான வாசல் வழியாகவே நுழைய வேண்டும் என்றோ, ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே தடுப்பு இருக்கக் கூடாது என்றோ கட்டாயப்படுத்த முடியாது.
ஆண்கள் மசூதிக்குச் சென்று தொழுவது கடமையாக்கப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம் பெண்களுக்கு வீட்டில் இருந்து தொழுவதே சிறந்தது என்று கூறப்பட்டுள்ளது. இதற்குக் காரணம், ஆண்கள் தொழுகை நடத்தச் செல்லும் போது குழந்தைகளைப் பராமரிக்க பெண்கள் வீட்டில் இருக்க வேண்டிய தேவை இருக்கலாம் என்பதாகும்.‘‘பெண்கள் மசூதிக்கு வருவதைத் தடுக்க வேண்டாம்’’ என்று இறை தூதர் முகமது நபியே கூறியுள்ளார். பெண்கள் மசூதிக்கு வந்தால் அவர்களுக்கு உரிய அனுமதி வழங்கப்பட வேண்டும், ஆனால் பாரம்பரிய நடைமுறைகள் மதிக்கப்பட வேண்டும். இவ்வாறு வழக்கறிஞர் ஷம்ஷாத் தெரிவித்தார்.