கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சிறையில் மின்சார கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டார்
பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் மரணம் அடைந்தது தொடர்பான வழக்கை முடித்து வைத்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொறியாளர் சுவாதி கடந்த 2016 ஆம் ஆண்டில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சிறையில் மின்சார கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம், சென்னை காவல் ஆணையரிடம் அறிக்கை கோரியது. ஆணையர் அளித்த அறிக்கையின் அடிப்படையில் ராம்குமார் தற்கொலை செய்து கொண்டார் என முடிவுக்கு வந்த ஆணையம், வழக்கை கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதம் முடித்துவைத்தது.
இந்த உத்தரவை எதிர்த்து ராம்குமாரரின் தந்தை பரமசிவம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், எந்த விசாரணையும் நடத்தாமல், சென்னை மாநகர காவல் ஆணையரின் அறிக்கையின் அடிப்படையில், தேசிய மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, ராம்குமார் மரணம் குறித்து விசாரணை நடத்த தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தேசிய மனித உரிமை ஆணையம் தரப்பில், ஆணையத்தின் புலன் விசாரணை பிரிவின் அறிக்கை மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையரின் அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் ராம்குமார் தற்கொலை செய்தது உறுதியானதால் வழக்கு முடித்து வைக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், காவல்துறை, மனித உரிமை ஆணைய புலன் விசாரணை பிரிவு ஆகியவற்றின் அறிக்கைகளின் அடிப்படையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவு சரிதான் என்றும், அதில் தலையிட எந்த காரணமும் இல்லை என்றும் குறி, ராம்குமாரின் தந்தை பரமசிவம் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.