கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
சொந்த மண்ணில் போட்டியிடுவேன் என்ற வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் காரைக்குடி தொகுதியில் களம் காணும் சீமான், அந்த தொகுதியை தமிழக அரசியலின் ஹாட் ஸ்பாட்டாக மாற்றியுள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ள நிலையில், தற்போது அரசியல் கட்சிகளுக்கிடையிலான போட்டி உச்சத்தை எட்டியுள்ளது. ஒருபுறம் ஆளுங்கட்சியான திமுக பொங்கல் தொகுப்பு, மகளிர் உரிமைத் தொகை மற்றும் கோடைகால சிறப்புத் தொகை என அடுத்தடுத்து அதிரடி சலுகைகளை அறிவித்து வருகின்றனர்.
மறுபுறம் கல்வி கடன் ரத்து, ஆண்களுக்கும் இலவச பேருந்து என கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அறிவித்து என்டிஏ கூட்டணி மிக உறுதியாக இருப்பதாகவும், கோட்டையை பிடிக்கப் போவது தாங்கள்தான் எனவும் அதிமுக முழக்கமிட்டு வருகிறது.
2026-ல் கப்பு நமதே என இளைஞர் படையோடும், விர்ச்சுவல் வாரியர்சின் பலத்தோடும், ஆட்சியை பிடிப்பதற்காக தற்போது தமிழகம் முழுவதும் பொதுக்குழு கூட்டத்தை கூட்டி தமிழக வெற்றிக் கழகத்தினர் புது யுக்தியோடு அரசியலில் களமிறங்கியுள்ளனர். இந்த அரசியல் சதுரங்க வேட்டையில் தமிழ் தேசிய அரசியலை முன்வைத்து கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 31 லட்சம் வாக்குகளைப் பெற்று இளைஞர் பட்டாளத்தை ஈர்த்த நாம் தமிழர் கட்சிக்கு இந்த முறை கடும் சவால் காத்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
இந்த சவால்களை உடைக்கும் விதமாக திருச்சியில் பிரம்மாண்ட மாநாட்டை நடத்திய அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் 117 ஆண்கள் மற்றும் 117 பெண்கள் என சரிபாதி இட ஒதுக்கீட்டில் வேட்பாளர்களை அதிரடியாக அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
கடந்த ஆண்டு காரைக்குடியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தனது சொந்த மண்ணில் தான் போட்டி என சீமான் கோடிட்டுக் காட்டியிருந்த நிலையில், தற்போது காரைக்குடி தொகுதியிலேயே அவர் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் காரைக்குடி தொகுதி தமிழகத்தின் முக்கியமான நட்சத்திர தொகுதியாக மாறியுள்ளது.
நான்கு முனைப் போட்டி நிலவும் இந்த களத்தில் திமுக மற்றும் அதிமுக கூட்டணிகள் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்காத நிலையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் டாக்டர் பிரபு போட்டியிடுவது உறுதியாகி உள்ள நிலையில், சொந்த மண்ணில் சீமான் களம் காண்பது காரைக்குடி தேர்தல் களத்தை அனல் பறக்கச் செய்துள்ளது. அதேசமயம் காரைக்குடியில் வரும் தேர்தலில் சீமானின் இந்த அதிரடி வியூகம் அவருக்கு கை கொடுக்குமா அல்லது தமிழக வெற்றிக் கழகம் மற்றும் மற்ற கட்சிகளின் பலமான கூட்டணி அவருக்கு முட்டுக்கட்டை போடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
காரைக்குடி தொகுதியை பொருத்த வரையில் கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக வேட்பாளராக எச். ராஜா போட்டியிட்டார். தற்போது திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக வென்று எஸ். மாங்குடி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.