கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
தமிழ்நாட்டில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலைவிட, குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களின் எண்ணிக்கை 5 விழுக்காடு அதிகரித்துள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 4,023 பேர் போட்டியிடும் நிலையில் 3,992 பேரின் பிரமாணப்பத்திரங்களை ஜனநாயக சீர்த்திருத்தங்களுக்கான சங்கமும் தேசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பும் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி 722 பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள் என்றும் 404 பேர் தீவிரமான குற்றப் பின்னணி கொண்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டுத் தேர்தலுடன் ஒப்பிடும்போது, குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களின் எண்ணிக்கை 13%-லிருந்து 18%-ஆக அதிகரித்துள்ளது கட்சி வாரியாக பார்க்கும் போது அதிகபட்சமாக அதிமுக வேட்பாளர்கள் அதிக அளவில் குற்றப்பின்னணி உடையவர்களாக இருக்கின்றனர்.
கடுமையான குற்றங்களைப் பொறுத்தவரை, 13 பேர் மீது கொலை வழக்கும், 44 பேர் மீது கொலை முயற்சி வழக்கும், 18 பேர் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளும் உள்ளன. நிதி நிலைமையை பொருத்தவரையில் தமிழக தேர்தலில் 981 கோடீஸ்வர வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதிலும் 22 பேர் 100 கோடிக்கும் மேல் சொத்து வைத்துள்ளனர்.
இதில் லால்குடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ், 5863 கோடியுடன் முதலிடத்தில் உள்ளார். தவெக தலைவர் விஜய் 648 கோடியுடன் 2வது இடத்திலும், ஆதவ் அர்ஜூனா 534 கோடியுடன் 3வது இடத்திலும் உள்ளார். கல்வியை பொருத்தவரையில் 46% பேர் பட்டம் பெற்றுள்ள நிலையில், 95 பேர் கல்வி அறிவு இல்லாதவர்களாக உள்ளனர். வயதை பொருத்தவரையில் 36% பேர் 25 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களாகவும், 51% பேர் 41 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களாகவும் உள்ளனர்.
இந்த தேர்தலில் 442 பெண்கள் போட்டியிடும் நிலையில், நாம் தமிழர் கட்சி அதிகபட்சமாக 50 சதவிகிதம் பேருக்கு வாய்ப்பு அளித்துள்ளது. கொலை, பாலியல் வன்கொடுமை வழக்குகளில் தண்டனை பெற்றோரை நிரந்தரமாக தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க வேண்டும் என்றும், அரசியல் கட்சிகளை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் எனவும் தமிழ்நாடு தேர்தல் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.