எத்தனை கொலை செய்தாலும் ஜாமினில் வந்துவிடலாம் என்கிற தைரியம்தான், சிறு சிறு சண்டைகளுக்கெல்லாம் கொலை செய்யும் சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருகின்றன. கொலை செய்து விட்டு நிதானமாக செல்லும் குற்றவாளிகள், கேஸை கோர்ட்டில் பார்த்துக் கொள்ளலாம் என தெனாவட்டாக வந்து சரணடையும் போக்கையும் சர்வ சாதாரணமாக பார்க்க முடிகிறது.
அப்படி ஒரு கொலை சம்பவம்தான் செங்கல்பட்டில் அரங்கேறி இருக்கிறது. இதற்கெல்லாம் கூடவா கொலை செய்வீர்கள்? எனக் கேட்கத் தோன்றும் அளவுக்கு ஒரு கொலையை அரங்கேற்றிவிட்டு, நிதானமாக இருசக்கர வாகனத்தில் வந்து காவல் நிலையத்தில் சரணடைந்திருக்கின்றனர். கொலைக் குற்றவாளிகளுக்கு சட்டத்தின் மீதுள்ள பயம் நீங்கிவிட்டதா?
செங்கல்பட்டு அடுத்த ஆத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 35 வயதான சந்திரன் என்கிற கருப்பட்டி சந்துரு. இவர் சிங்கபெருமாள் கோயில் அடுத்த செட்டிபுண்ணியம் கிராமத்தில் தங்கி, நெல் அறுவடை இயந்திர ஓட்டுநராக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று சந்துரு, செட்டிபுண்ணியம் ரயில்வே கேட் அருகில் உள்ள காலி இடத்தில் தனது நண்பருடன் சேர்ந்து மது அருந்தி இருக்கிறார்.
பின்னர், அங்கிருந்து தனது வீட்டிற்கு செல்ல முயன்ற சந்துரு செட்டிபுண்ணியம் ரயில்வே கேட் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, மூன்று பேர் சேர்ந்து சந்துருவை வழிமறித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். போதையில் இருந்த சந்துரு பதிலுக்கு சண்டையிட, அரிவாளை உருவிய அந்த கும்பல் சரமாரியாக வெட்டித் தாக்கியுள்ளது. இந்த கொடூரத் தாக்குதலில் மயக்கமடைந்த சந்துரு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.
அதன்பிறகும் ஆத்திரம் அடங்காத அந்த கும்பல், அருகில் கிடந்த கல்லை எடுத்து, அவர் மீது போட்டு கொலை செய்ய முயன்றுள்ளது. அப்பகுதியில் கூட்டம் கூடவே உடனே அவர்கள் மூவரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இச்சம்பவத்தை கண்ட பொதுமக்கள் சிங்கபெருமாள்கோயில் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
விரைந்து வந்த போலீசார் பலத்த காயமடைந்த சந்துருவை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சந்துருவிற்கு தீவிர சிகிச்சை அளித்தபோதும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் சம்பவத்தில் தொடர்புடைய அஜித் மற்றும் அவரது நண்பரான ராஜேஷ் உள்ளிட்ட இருவர் மட்டும் சர்வ சாதாரணமாக சிரித்து பேசிக்கொண்டே இருசக்கர வாகனத்தில் செங்கல்பட்டு நகர காவல் நிலையத்திற்கு வந்துள்ளனர். பின்னர் நேராக காவல் நிலையத்திற்குள் சென்ற அவர்கள், நாங்கள் இருவரும் ஒரு கொலையை செய்து விட்டோம். அரெஸ்ட் பண்ணிக்கோங்க என நாற்காலியில் வந்து அமர்ந்துள்ளனர். வர வர கொலை கேஸ் எல்லாம் பெட்டிக் கேஸ் மாதிரி வருவதைப் பார்த்த போலீசார் நொந்து கொண்டனர்.
இக்கொலை நடந்த சம்பவம் சிங்கபெருமாள் கோயில் காவல் நிலைய எல்லை என்பதால் சரணடைந்த இருவரையும் சிங்கபெருமாள் கோயில் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். சிங்கபெருமாள் கோயில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தபோது கொலைக்கான காரணம் தெரியவந்தது.
இரு தினங்களுக்கு முன்பு மகேந்திரா சிட்டி ஜங்ஷனில் பேட்டரி கடை வைத்துள்ள அஜித்திடம், சந்துரு பேட்டரி ஒன்றை வாங்கியிருக்கிறார். வாங்கிய பேட்டரி தரமற்றதாக இருந்ததால் மீண்டும் கடைக்குச் சென்று சந்துரு, அஜித்திடம் கடும் தகராறில் ஈடுபட்டிருக்கிறார். அதோடு விடாமல் அஜித் கடையின் கண்ணாடியை அடித்து நொறுக்கி, கொலை மிரட்டல் விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், கடும் ஆத்திரத்தில் இருந்த அஜித், சந்துருவை தீர்த்துக் கட்ட வேண்டும் என்கிற வெறியில் திட்டம் போட்டிருக்கிறார்.
அதன்படி, அஜித் தனது நண்பர் ராஜேஷ் மற்றும் மற்றொரு நபரை அழைத்துக் கொண்டு சந்துரு வழக்கமாக மது அருந்தும் இடத்திற்கு சென்றபோது தான் வழியில் மடக்கி வெட்டியது விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கில் தப்பியோடிய மற்றொரு நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.