தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026: தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. தற்போதைய ஆட்சியின் கடைசி சட்டப்பேரவை கூட்டத்தொடரும் இன்றுடன் நிறைவுபெற்றுவிட்டது. வரும் பிப். 23ஆம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட இருக்கிறது.
மொத்த வாக்காளர் எண்ணிக்கை
கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்ளப்பட்டது. எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு முன் தமிழ்நாட்டில் 6.41 கோடியாக இருந்த தமிழ்நாடு வாக்காளர்களின் எண்ணிக்கை, அதற்கு பின் 5.43 கோடியாக குறைந்துள்ளது. இருப்பினும் மீண்டும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டது. வரும் பிப். 23ஆம் தேதி மொத்தம் எத்தனை வாக்காளர்கள்?, அதில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை எவ்வளவு?, பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை எவ்வளவு? என்பது தெரியவரும்.
விஜய்யால் ஏற்பட்டுள்ள நெருக்கடி
தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் மொத்தம் 234 தொகுதிகளிலும் சுமார் ஐந்தரை கோடி வாக்காளர்கள் தமிழ்நாட்டில் இருப்பார்கள் என்பதால், எந்த கட்சியோ அல்லது கூட்டணியோ வெற்றி பெற வேண்டும் என்றால் 118 தொகுதிகளை வென்றாக வேண்டும். மேலும் இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக மற்றும் நாம் தமிழர் என நான்கு முனை போட்டி நிலவுவதால் ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு என்பது மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் இருக்கும். அதுவும் விஜய்யின் அரசியல் நுழைவு என்பது பிரதான கட்சிகளான திமுக, அதிமுகவுக்கு கடுமையான நெருக்கடியையும் உருவாக்கியுள்ளது என்பதையும் மறுக்க முடியாது.
திமுக, அதிமுகவுக்கு என்ன பிரச்னை?
ஆளும் திமுக அரசுக்கு எதிரான மனநிலை கொண்டவர்களின் வாக்கு அதிமுக அணியின் பக்கம் மட்டும் செல்லாமல் தவெகவின் பக்கமும் செல்லும். இதனால் வாக்குகள் சிதறும். அதிக வாக்குகளை பெறும் கட்சிதான் வெற்றிபெறும் என்பதால் இது திமுகவுக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், பாஜக எதிர்ப்பு வாக்குகள், அதிமுகவுக்கு எதிரான வாக்குகள், இளைஞர்கள், புதிய வாக்காளர்கள் ஆகியோரின் வாக்குகள் முழுமையாக திமுக பக்கம் செல்லாமல் தவெகவுக்கும் செல்லும். இது திமுகவுக்கு பின்னடைவாக அமையும். இந்தச் சூழலில், திமுக தனது பலம், பலவீனத்தை புரிந்துகொண்டு கூட்டணியை பலப்படுத்த திட்டமிடும்.
திமுக கூட்டணியில் சலசலப்பு
அதே சூழலில், விஜய்யின் வருகை மற்றும் ஆட்சி, அதிகாரத்தில் பங்களிப்பேன் என்ற வாக்குறுதி ஆகியவை திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தாமல் இல்லை. காங்கிரஸ் கட்சி திமுகவிடம் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது, மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவீன் சக்ரவர்த்தி போன்ற ராகுல் காந்திக்கு நெருக்கமானவர்கள் திமுகவை சீண்டும் விதமாக தொடர்ந்து கருத்து கூறி வந்த நிலையில், தற்போது மேலிட உத்தரவால் கப்சிப் என இருக்கிறார்கள்.
விரைவில் தொடங்கும் பேச்சுவார்த்தை
இருப்பினும், வரும் பிப். 23ஆம் தேதி திமுகவின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கிய பின்னர், திமுக – காங்கிரஸ் இடையேயான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படும்பட்சத்தில் கூட்டணியில் விரிசல் இருக்காது எனலாம். மதிமுகவும் கூட விஜய்க்கு ஆதரவாக தற்போது பேசி வருகிறது. தேமுதிகவின் வரவால் காங்கிரஸ் மற்றும் மதிமுகவின் இருப்பு சற்றே கேள்விக்குள்ளாகி உள்ளது.
கடந்த தேர்தலில் நடந்தது என்ன?
கடந்த சட்டப்பேரவை தேர்தலிலேயே திமுக மட்டும் 173 தொகுதிகளில் போட்டியிட்டது. மதிமுக – 6, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி – 3, மனிதநேய மக்கள் கட்சி – 2, அகில இந்திய பார்வட் பிளாக், தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலை கட்சி, ஆதி தமிழர் பேரவை உள்ளிட்ட கட்சிகள் தலா 1 தொகுதியில் என மொத்தம் 188 தொகுதிகளில் உதயசூரியன் சின்னம் போட்டியிட்டது. காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள்; விசிக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகளுக்கு 6 தொகுதிகள், இந்தியன் யூனியன் முஸ்லீக் லீக் 3 தொகுதிகளிலும் போட்டியிட்டது.
கட்சிகளின் கோரிக்கை
இம்முறை தேமுதிக, மக்கள் நீதி மய்யம் ஆகியவை திமுக கூட்டணிக்குள் வந்துள்ளன. காங்கிரஸ் 40 தொகுதிகளுக்கு மேல் கேட்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், திமுக அதற்கு உடன்படவில்லை என்றும் கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் மதிமுக அனைத்து தொகுதிகளிலும் உதயசூரியனில்தான் போட்டியிட்டது. ஆனால் இம்முறை தனிச்சின்னத்தில் போட்டியிட கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், விசிக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் கடந்த தேர்தலை விட அதிக தொகுதிகளை கேட்பதாகவும், இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்பதாகவும் கூறப்பட்டு வந்தது.
யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்?
ஆனால், தற்போதைய நிலவரப்படி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் அதிகாரப்பூர்வமாக தொகுதி பங்கீடு உறுதியாகும்.
உதயசூரியன் சின்னத்தில்…: திமுக மொத்தம் 170 இடங்களில் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் கட்சிகளும் அடக்கம். கடந்த முறை கூட்டணியில் இருந்த கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, அகில இந்திய பார்வட் பிளாக், தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலை கட்சி, ஆதி தமிழர் பேரவை உள்ளிட்டவை இம்முறையும் இடம்பெறலாம். புதிய தமிழகம் உள்ளிட்ட சில கட்சிகளிடமும் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
காங்கிரஸ் கட்சி: காங்கிரஸ் கட்சிக்கு 28-30 தொகுதிகள் வரை ஒதுக்க திமுக திட்டமிட்டுள்ளதாகவும், அதில் ஒரு மாநிலங்களவை சீட் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மாநிலங்களவை சீட் 2028ஆம் ஆண்டில் திமுக ஒதுக்கலாம். கடந்த முறை 25 தொகுதிகளில் போட்டியிட்டு 18 தொகுதிகளில் காங்கிரஸ் வென்றிருந்தது.
விசிகவுக்கு எத்தனை தொகுதி?: அதேநேரத்தில், களத்தில் சுறுசுறுப்பாக செயல்பட்டு வரும் தொல். திருமாவளவனின் விசிகவுக்கு இம்முறை 8 இடங்களும், 1 மாநிலங்களவை சீட்டும் ஒதுக்க பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது. விசிக இரட்டை இலக்கத்தில் தொடர்ந்து சீட் கேட்டு வந்தது. கடந்த முறை 6இல் போட்டியில் நான்கில் வென்றிருந்தது. எனவே இம்முறை அதற்கு சீட் அதிகம் ஒதுக்கப்படலாம் என கூறப்படுகிறது.
தேமுதிக: புதிதாக வந்துள்ள தேமுதிகவுக்கு 6 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை சீட் கொடுக்கப்படலாம் என கூறப்படுகிறது. அதுவும் வரும் மார்ச் மாதத்திலேயே மாநிலங்களவை சீட்டை திமுக வழங்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இதர கட்சிகளுக்கு…: மதிமுகவுக்கு அதே 6 சீட் கொடுக்கப்படலாம், அதில் எத்தனை உதயசூரியன் சின்னம் என்பது பேச்சுவார்த்தையில் உள்ளது. சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் கடந்த முறை தலா 6 இடங்களை பெற்றாலும், தலா 2 இடங்களை மட்டுமே வென்றன. இதனால், இம்முறையும் சிபிஎம், சிபிஐ கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகளை ஒதுக்கவே திமுக திட்டமிட்டுள்ளதாம். தொகுதியில் வேண்டுமானால் மாற்றம் இருக்கும். இந்தியன் யூனியன் முஸ்லீக் லீக் மற்றும் மக்கள் நீதி மய்யத்திற்கும் தலா 2 சீட் ஒதுக்கப்படலாம்.
மேலும் படிக்க | திமுகவே மீண்டும் ஆட்சிக்கு வரும்… ஓபிஎஸ் தடாலடி – சூடுபிடிக்கும் தேர்தல் களம்
மேலும் படிக்க | திமுக கூட்டணி! தேமுதிகவிற்கு எத்தனை தொகுதிகள்? காங்கிரஸ் வெளியேறுகிறதா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் – @ZEETamilNews
ட்விட்டர் – @ZeeTamilNews
டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android இணைப்பு: https://bit.ly/3AIMb22
ஆப்பிள் இணைப்பு: https://apple.co/3yEataJ