கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
முன்னாள் முதலமைச்சர்களான எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரைச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுத்த பெருமை ஆண்டிபட்டி தொகுதிக்கு உண்டு
தமிழகத்தில் எதிர்வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தொகுதிக்கு உட்பட்ட ‘வெள்ளிமலை’ என்ற குட்டி வாக்குச்சாவடி ஒட்டுமொத்த இந்தியாவையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. வெறும் 5 வாக்காளர்களுக்காகத் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் இந்த அதிரடி நடவடிக்கை, ஜனநாயகத் திருவிழாவின் மகுடம் எனப் போற்றப்படுகிறது.
முன்னாள் முதலமைச்சர்களான எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரைச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுத்த பெருமை ஆண்டிபட்டி தொகுதிக்கு உண்டு. இத்தொகுதியின் கடமலை-மயிலை ஒன்றியம், தும்மக்குண்டு ஊராட்சியில் அமைந்துள்ள வெள்ளிமலை கிராமம், ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ளது. இங்கு ஏலம், காபி போன்ற பணப்பயிர்கள் அதிகளவில் விளைகின்றன.
கடந்த 1990 வரை இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வந்தனர். ஆனால், இப்பகுதி புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்ட பின், வனத்துறையின் கட்டுப்பாடுகள் அதிகரித்தன. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்கள், படிப்படியாக சமவெளிப் பகுதிகளுக்கு இடம்பெயரத் தொடங்கினர்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது இக்கிராமத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை 6-ஆக இருந்தது. அதன் பிறகு மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையில் (SIR), ஒருவரது பெயர் நீக்கப்பட்டு, தற்போது செந்தில், ஜெயராணி, சுதா, பவுல் மற்றும் ரோகித் என மொத்தம் 5 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் வெளிமாநிலத் தொழிலாளர்கள் என்பதால், அவர்களுக்கு இங்கு வாக்குரிமை இல்லை என மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத்சிங் தெளிவுபடுத்தியுள்ளார்.
இருப்பினும், இந்த 5 பேரும் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக, அங்குள்ள அரசு உதவிபெறும் ஆரம்பப் பள்ளியில் பிரத்யேக வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து கடந்த மார்ச் 15-ஆம் தேதி கருத்து தெரிவித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார், 5 வாக்காளர்களுக்காக வாக்குச்சாவடி அமைக்கும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு பாராட்டுக்குரியது எனத் தெரிவித்தார்.
தேர்தல் ஆணையத்தின் இந்தச் சிறப்பான நடவடிக்கைக்கு வெள்ளிமலை மக்கள் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளனர். அதே வேளையில், தங்களின் அடிப்படைத் தேவைகள் குறித்தும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த செந்தில் கூறுகையில், “வனத்துறையின் நேரக் கட்டுப்பாடுகளால் (மாலை 6 மணி வரை மட்டுமே அனுமதி) அவசர காலங்களில் பெரும் துயரத்திற்கு ஆளாகிறோம். சாலை மற்றும் முறையான போக்குவரத்து வசதிகள் இல்லாததால், அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்வதற்குக் கூட வனத்துறையின் நெருக்கடியைச் சந்திக்கிறோம். தேர்தல் ஆணையம் எங்களுக்கு வாக்குச்சாவடி அமைத்துத் தருவது போல், தமிழக அரசும் எங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
மார்ச் 20, 2026 11:15 PM IST
Unique Polling Station: 5 வாக்காளர்களுக்காக ஒரு வாக்குச்சாவடி… இந்தியாவையே வியக்க வைத்த ஆண்டிபட்டி ‘வெள்ளிமலை’ கிராமம்