மாலை நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல், திடீரென வாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு ஆக்ரோஷமாக தாக்கியுள்ளனர். சாதிப்பெயரை கேட்டு தாக்கியதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டியுள்ள நிலையில், வாய் தகராறில் தெரிந்த நபர்களே தாக்கியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடந்தது என்ன?
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அடுத்துள்ள இடைக்காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜூ. பெயிண்டர் வேலை பார்த்துவந்த இவர், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று கடை வீதியில் நின்றுள்ளார். அங்கு வந்த நபருக்கும், ராஜூக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர், அங்கிருந்து ராஜூ தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
மாலை நேரத்தில் அவர் வீட்டின் முன்பு இருந்துள்ளார். அப்போது, இருசக்கர வாகனங்களில் 9 பேர் திபுதிபுவென வந்துள்ளனர். வாள் மற்றும் கத்தியுடன் வந்தவர்கள் திடீரென ராஜூவை தாக்கியுள்ளனர். தடுக்க வந்த அவரது உறவினர்கள் மீதும் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். தொடர்ந்து கண்ணில் பட்டவர்களை சரமாரியாக வெட்டியுள்ளனர்.
அலறல் சத்தம் கேட்டு ஊர்மக்கள் கூடியதும், மர்ம கும்பல் அங்கிருந்து தப்பியோடியுள்ளது. இந்த தாக்குதலில் ராஜூவின் உறவினர்களான தினேஷ், ராஜேந்திரன், சுப்பிரமணி ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த திங்கட்கிழமை நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே, 9 பேர் கொண்ட கும்பல் கொலைவெறித் தாக்குதல் நடத்தியதில் இருவர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர். நாங்குநேரி ஏரியாவில் யார் பெரிய ஆளு என்று கெத்து காட்டுவதற்காக டீக்கடை மீது பெட்ரோல் குண்டுவீசி கொலைவெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
அந்த கொடூரம் அரங்கேறிய மறு நாளே சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ஊருக்குள் புகுந்து 8 பேர் கும்பல் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது. ஆனால், சிசிடிவி காட்சி வெளியாகும்வரை போலீசார் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட ராஜூ, சாதிப் பெயரை கேட்டுத்தான் தன்னை தாக்கினார்கள் என்று கூறியுள்ளார்.
மேலும், விசாரணைக்கு வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை வெளியில் பரப்பக் கூடாது என்று மிரட்டியதாகவும் கூறியுள்ளனர். விவகாரம் பூதாகரமான நிலையில் சிவகங்கை மாவட்ட காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இடைக்காட்டூரைச் சேர்ந்த ராஜூ மற்றும் அவருக்கு நன்கு தெரிந்த நண்பர்களான பாண்டியராஜன், மகேஸ்வரன் ஆகியோருக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, மகேஸ்வரன் தனது நண்பர்களுடன் சேர்ந்து ராஜூவின் வீட்டிற்கு சென்று தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மானாமதுரை காவல் நிலையத்தில் வழக்கு பதிந்து 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எஞ்சிய நபர்களைப் பிடிக்க தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாதிப்பெயரை கேட்டு தாக்கியதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டிய நிலையில், நன்கு அறிமுகமானவர்களுக்கு இடையிலான வாய்த்தகராறில் தான், தாக்குதல் தொடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். எனவே, இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி அத்துமீறலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.