கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
சிவகங்கை மாவட்டம், இடைக்காட்டூர் பகுதியில் நடந்த மோதல் விவகாரத்தில் காவல்துறையினர் ஐந்து பேரை கைது செய்துள்ளனர்.
நாங்குநேரி சம்பவம் போல சாலையில் சென்றவர்கள் மீது ஒரு கும்பல் விரட்டி விரட்டி தாக்குதல் நடத்தி உள்ள சம்பவம் மானாமதுரை அருகே நடந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் காவல்துறையினர் ஐந்து பேரை கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் இடைக்காட்டூர் மேலத்தெரு பகுதியில் பட்டியலின மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த பகுதியைச் சேர்ந்த ராஜூ என்பவர் அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த போது, அந்த வழியாக அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சென்ற கும்பல் அவரை தாக்கியதாக தெரிகிறது.
அவர்களிடம் இருந்து தப்பி ராஜூ மேலத்தெருவுக்குள் சென்றார். அந்த கும்பல் அவரை விரட்டி சென்ற நிலையில், சாலையில் நின்றிருந்தவர்கள் மீதும் ஆயுதங்களை கொண்டு கொலை வெறி தாக்குதல் நடத்தி உள்ளனர். இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
3 பேர் படுகாயம் அடைந்த நிலையில் பலருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன. இதுகுறித்து மானாமதுரை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு தாக்குதல் நடத்திய கும்பலில் ஐந்து பேரை கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக சிவகங்கை காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கடந்த 3ஆம் தேதி மாலை மானாமதுரை இடைக்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த இராசு மற்றும் அவருக்கு நன்கு தெரிந்த நண்பர்களான செட்டிக்குளத்தைச் சேர்ந்த பாண்டியராஜன் மற்றும் வே.புதுக்குளத்தைச் சேர்ந்த மகேஸ்வரன் ஆகியோரிடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக மகேஸ்வரன் அவரது நண்பர்களுடன் இடைக்காட்டூரைச் சேர்ந்த இராசுவின் வீட்டிற்கு சென்று தகராறு செய்து அவரை தாக்கியுள்ளார். இதில் இராசுவிற்கு லேசான காயங்கள் ஏற்பட்டன.
இது தொடர்பாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் மானாமதுரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், இந்த வழக்கில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட மற்றவர்களை கைது செய்ய தீவிரமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.