கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
நாளை பாஜகவின் தமிழ்நாடு வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், நாளை வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. தற்போது தமிழ்நாட்டில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் தலைமையில் கூட்டணிகளும், நாதக மற்றும் தவெக ஆகியவை தனியாகவும் களம் காண்கின்றன.
தமிழ்நாட்டில் இன்று (30ஆம் தேதி) முதல் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. முதல்நாளான இன்றே திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், தான் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் தாக்கல் செய்தார். இதேபோல், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடியிலும், தவெக தலைவர் விஜய் பெரம்பூரிலும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
அதேசமயம், திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இரு முக்கிய தேசிய கட்சிகளான முறையே காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகியவை தங்களது வேட்பாளர்களை இன்னும் அறிவிக்கவில்லை. அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு மொத்தம் 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பாஜக தமிழ்நாடு தேர்தல் மேலிட பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் நாளை காலை 10 மணிக்கு சென்னை வர இருக்கிறார். இதனைத் தொடர்ந்து நாளை பாஜகவின் தமிழ்நாடு வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மார்ச் 30, 2026 10:07 PM IST