கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
மின் வாரிய அனுமதியின்றி ‘மரகத நாணயம் 2’ படப்பிடிப்பு சென்னை எண்ணூர் அனல் மின் நிலைய வளாகத்தில் நடத்தப்பட்டதால் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
சென்னை எண்ணூரில் உள்ள அனல் மின் நிலைய வளாகத்தில் முறையான அனுமதியின்றி நடைபெற்று வந்ததாக ‘மரகத நாணயம் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பை மின்வாரிய அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
கடந்த 2017ஆம் ஆண்டில் ஆதி, நிக்கி கல்ராணி நடிப்பில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற மரகத நாணயம் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. இந்தப் படத்தின் முக்கியக் காட்சிகளை சென்னை எண்ணூர் அனல் மின் நிலைய வளாகத்தில் நடத்த மின்வாரியத்திடம் படக்குழுவினர் அனுமதி கோரியிருந்தனர்.
அதற்கான முறையான அனுமதி கடிதம் வழங்கப்படுவதற்கு முன்பே, படக்குழுவினர் படப்பிடிப்பை தொடங்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு வந்த மின்வாரிய ஊழியர்கள், கட்டிடங்கள் மிகவும் பழுதடைந்து, இடியும் நிலையில் உள்ளதால் படப்பிடிப்பு நடத்துவது உயிருக்கு ஆபத்தானது என கூறி தடுத்து நிறுத்தினர்.
திறந்தவெளியில் படப்பிடிப்பு நடத்துவதாக அனுமதி கோரிவிட்டு, ஆபத்தான கட்டிடங்களுக்கு அருகிலேயே படப்பிடிப்பு நடத்துவதாகவும் மின் வாரியம் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது. மின் வாரிய உயர் அதிகாரிகளின் உத்தரவைத் தொடர்ந்து, படப்பிடிப்பு தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அனைத்தும் வெளியேற்றப்பட்டன. முறையான அனுமதி கிடைக்கும் வரை படப்பிடிப்பைத் தொடங்கக் கூடாது எனக் கூறி மின் வாரிய அதிகாரிகள் அங்கு முகாமிட்டுள்ளனர்.
சென்னை (மெட்ராஸ்), சென்னை, தமிழ்நாடு