தோல்வியடைந்த தொகுதி மறுசீரமைப்பு மசோதா… அடுத்து என்ன நடக்கும் ? | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)


இந்திய அரசியலமைப்புச் சட்டம் விதி 81, கூடுமானவரையில் மக்கள் தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. இருப்பினும், மக்கள் தொகையை சிறப்பாக கட்டுப்படுத்திய மாநிலங்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, 42வது, 84-வது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் (81 (3)) தொகுதி எண்ணிக்கை 2026 வரை அதிகரிக்கக்கூடாது.

81 பிரிவு மக்கள்தொகை அடிப்படையிலான பிரதிநிதித்துவத்தை வலியுறுத்துகிறது. ஆனால், தென்மாநிலங்களுக்கு சாதகமாக 81(3) பிரிவு உள்ளது. இதன் காரணமாகவே, கடந்த அரைநூற்றாண்டு காலமாக உத்தரபிரதேசத்தின் மக்கள் தொகை அதிகரித்திருந்தாலும் அதற்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கவில்லை. தமிழ்நாட்டின் மக்கள்தொகை விகிதம் தொடர்ந்து குறைந்தாலும் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறையவில்லை. 2026ஆம் ஆண்டிற்கு பிந்தைய மக்கள் கணக்கெடுப்பு முடிவடையும் வரை தொகுதி மறுசீரமைப்பை மேற்கொள்ளக்கூடாது என்பது அரசியலமைப்பிலே உள்ளது.

அடுத்ததாக பிரிவு 82. 2026ஆம் ஆண்டிற்குப் பின்னர் முதலாவதாக நடக்கும் கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்திய நாடாளுமன்றம் தொகுதியை மறுவரையறை செய்யவேண்டும் என்று தெரிவிக்கிறது. இந்த தொகுதி மறுசீரமைப்பு எந்த அதிகார அமைப்பால் எந்த முறையில் நடத்தப்பட வேண்டும் என்பதை நாடாளுமன்றம் தனது சட்டத்தினால் தீர்மானித்துக் கொள்ளலாம். அதாவது, 2026க்கு பிறகு நடத்தப்படும் மக்கள் கணக்கெடுப்பு முடிவடைந்ததும் (81(3)) செல்லாததாகிறது.

2027-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கான அறிவிப்பை ஜூன் 16, 2025 அன்று அரசிதழ் அறிவிப்பு மூலம் அறிவித்தது. இரண்டு கட்டங்களாக நடைபெறும் கணக்கெடுப்பில் முதல் கட்டப்பணிகள் சில தினங்களுக்கு முன்புதான் (கடந்த ஏப்ரல் 1ம் தேதி) தொடங்கியது. இரண்டாவது கட்டத்தில் சாதி தொடர்பான கேள்வியும் சேர்க்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

எனவே, இந்த மக்கள் கணக்கெடுப்பு தரவுகளை அடிப்படையாக கொண்டு நாடாளுமன்றம் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளலாம். பிரிவு 82-ன் கீழ் கட்டாயம் மேற்கொள்ளவும் வேண்டும். தென்மாநிலங்களின் விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க வேண்டிய சட்டபாதுகாப்பு எதுவும் இல்லை. 2026-ம் ஆண்டு மக்கள் கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் தமிழ்நாட்டிற்கான மக்களவை தொகுதிகள் 39ல் இருந்து 31 ஆக குறையும். ஒட்டுமொத்த தென்மாநில தொகுதிகளின் எண்ணிக்கை 130 என்பதிலிருந்து 103 என குறையும்.

மத்திய அரசு கொண்டு வந்த அரசியலமைப்பு மசோதா சொல்வது என்ன?

  1. மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 550ல் இருந்து 850 ஆக அதிகரிக்கிறது.

2. ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதன் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கிறது. (கிட்டத்தட்ட பிரிவு 81 வலியுறுத்தியது போன்று)

3. தற்போதைய இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி (பிரிவு 82), ஒவ்வொரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பிறகும் அதன் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நாடாளுமன்றத்தை வலியுறுத்துகிறது. ஆனால், இந்தத் திருத்த மசோதா எப்போது தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்வது மற்றும் எந்த ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு அதனை நடத்துவது என்று தீர்மானிக்கும் அதிகாரத்தை நாடாளுமன்றத்திற்கே வழங்குகிறது.

இதன் தொடர்ச்சியாக கொண்டு வரப்பட்ட ‘தொகுதி மறுவரையறை மசோதா 2026’ (Delimitation Bill, 2026), தொகுதி மறுவரையறை ஆணையம் அமைக்கப்படும் நாளன்று எந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளதோ, அதையே பயன்படுத்த வேண்டும் என்று கூறுகிறது. இதன் பொருள் என்னவென்றால், 2021-ஆம் ஆண்டிற்கான கணக்கெடுப்பு இன்னும் வெளியிடப்படாத நிலையில், அடுத்ததாக நடைபெறும் தொகுதி மறுசீரமைப்பிற்கு 2011-ஆம் ஆண்டின் மக்கள் கணக்கெடுப்பு தரவுகளே அடிப்படையாக அமையும் என்பதாகும்.

1971 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில், நாடாளுமன்ற எண்ணிக்கையை 2026 வரை மாற்றக் கூடாது என்ற பிரிவை நீக்கியிருக்கிறது. இருப்பினும், அமித் ஷா தனது உரையில், “தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களின் எண்ணிக்கை குறையாது. அனைத்து மாநிலங்களுக்கும் 50% இடங்கள் உயர்த்தப்படும். மாநிலங்களுக்கு இடையே எந்த விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை உள்ளனவோ அதே விகிதத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்படும் என்று காரணத்தை வாய்மொழியாக அறிவித்தார். வாய்மொழி உத்தரவாதத்தை ஏற்காத திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மசோதாவுக்கு எதிராக குரல் கொடுத்தன.

அமித் ஷா வைத்த ட்விஸ்ட்:

மசோதாவுக்கு போதிய ஆதரவில்லை என்பதை உணர்ந்த அமித் ஷா, வாக்கெடுப்பு நடப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்பாக, “தென்மாநிலங்களின் எண்ணிக்கை குறையாத வண்ணம் அனைத்து மாநிலங்களுக்கும் 50% இடங்கள் உயர்த்தும் முறையை மசோதாவுக்குள் இடம் பெற வைப்பததாகவும், எதிர்க்கட்சிகள் ஆதரவளிக்க தயாரா என்றும் கேள்வி எழுப்பினார். ஒட்டுமொத்த அவையே மௌனமானது. நாட்டு மக்கள் காணாத திருப்பமாய் இது அமைந்தது. இருப்பினும், எதிர்கட்சிகள் மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனர். மசோதா தோல்வியுற்றதாக சபாநாயகர் அறிவித்தார்.

வாய்ப்பை நழுவ விட்டதா தமிழ்நாடு?

2026 மக்கள் கணக்கெடுப்புக்குப் பிறகு வரப்போகும் தொகுதி சீரமைப்பு சவாலைத் தள்ளிப்போட முடியாது என்றும் தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்க எந்த அரசியலமைப்புப் பாதுகாப்பும் தற்போது இல்லை என்றும் அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது மகளிர் இடஒதுக்கீடு என்பதை பாஜக தனது அரசியல் வெற்றியாக பார்க்கிறது. அதை அமல்படுத்த வேண்டும் என்றால் தொகுதி மறுவரையறை அவசியம். இந்த மசோதாவை நிறைவேற்ற பாஜகவுக்கு 2/3 பெரும்பான்மை தேவைப்பட்டது. அந்த நிர்பந்தம் இருந்ததால்தான் அமித் ஷா 50% இடங்களை உயர்த்தி தென்மாநிலங்களை பாதுகாக்கிறேன் என்ற சலுகையை முன்வைத்தார்.

ஆனால், எதிர்காலத்தில் இந்த சலுகை வழங்கத் தேவையில்லை. ஏனெனில், 2026-க்குப் பிறகு நடக்கும் தொகுதி மறுவரையறைக்கு விதி 82-இன் கீழ் ஒரு சாதாரண சட்டம் (Simple Majority) போதும். அப்போது 2/3 பெரும்பான்மை தேவையில்லை. எனவே, அவர்கள் எதிர்க்கட்சிகளிடம் சமரசத்திற்கு வர வேண்டிய அவசியமே இருக்காது. தென்மாநிலங்களின் இடங்கள் குறைந்தாலும், சட்டப்படி அதை யாராலும் தடுக்க முடியாது. நீதிமன்றத்திற்கும் செல்ல முடியாது.

பாஜகவுக்கு பின்னடைவா? இந்த மசோதாவின் தோல்வி பாஜகவுக்கு ஒரு அரசியல் பின்னடைவாக அமையாது. வரும் நாட்களில், பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு தர முயன்றோம், ஆனால் எதிர்க்கட்சிகள் அதைத் தடுத்தன என்ற பிரச்சாரத்தை பாஜக மிகத்தீவிரமாக முன்னெடுக்கும். ராமர் கோயில், 370 சிறப்பு அந்தஸ்த்து நீக்கம், குடியுரிமைச் சட்டம், பொது சிவில் சட்டம் வரிசையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை 2029 தேர்தலின் மிகப்பெரிய வாக்குறுதியாக மாற்றும். காங்கிரஸ், சமாஜ்வாதி, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளை விட இந்த விவகாரத்தை ஒரு உணர்ச்சிகரமான அரசியலாக பாஜக மாற்றும்.

ஒருவேளை 2029-ல் பாஜக மீண்டும் வெற்றி பெற்றால், அவர்களுக்கு எவ்வித முட்டுக்கட்டையும் இருக்காது. அப்போது தொகுதி மறுவரையறை செய்ய விதி 82-இன் கீழ் சாதாரண பெரும்பான்மை (Simple Majority) மட்டுமே தேவைப்படும். இன்று அமித் ஷா வழங்க முன்வந்த “50% கூடுதல் இடங்கள்” என்ற சலுகையை அப்போது வழங்க வேண்டிய எந்த அவசியமும் அரசுக்கு இருக்காது.நாங்கள் சமரசத்திற்கு வந்தபோது நீங்கள் ஏற்கவில்லை, இனி சட்டப்படி மக்கள் தொகை கணக்கெடுப்பின்படியே தொகுதிகள் பிரிக்கப்படும்” என்று அரசு நேரடியாகச் செயல்பட்டால், தென்மாநிலங்களால் அதைச் சட்டப்பூர்வமாகத் தடுக்க முடியாது.

அமித் ஷா கொடுத்த அந்த இறுதி நேர வாய்ப்பை நிராகரித்ததன் மூலம், தமிழ்நாடு தனது தொகுதிகளைத் தக்கவைத்துக் கொள்ளும் ஒரு சட்டப்பூர்வ உத்தரவாதத்தை நழுவ விட்டுவிட்டதா? அல்லது இன்னும் வலிமையான ஒரு கூட்டாட்சிப் போராட்டத்திற்குத் தயாராகிறதா? இதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.



Thank You

Related Posts

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – 9 – Kumudam

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – 9 – மதுகேசவ்  பொற்கண்ணன் “உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந் தேர்க்கு/ அச்சாணி அன்னார் உடைத்து” (குறள் 667) என்று நமக்கு வாழ்க்கைப் பாதையை உணர்த்துகின்றார் வள்ளுவர். பெரும்பாலானப்  பழையத் திரைப்படங்களில், நகைச்சுவைக் காட்சி…

விஜயை தேர்தலில் தோற்கடித்து மீண்டும் சினிமாவுக்கே அனுப்ப வேண்டும் – நடிகர் சத்யராஜ் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 19, 2026 8:24 AM IST குறைந்த சம்பளம் வாங்கும் தன்னையே மக்கள் எளிதாக சந்தித்து பிரச்சனையை சொல்ல முடியாத நிலையில், பெரிய சம்பளம் வாங்கும் விஜயை எப்படி போய் பார்க்க முடியும் என்று கேள்வியெழுப்பினார். சத்யராஜ் –…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – 9 – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 10 views
வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – 9 – Kumudam

தல ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் : நடிகர் அஜித்குமார் ரேஸிங் வாழ்க்கை ஆவணப்பட டீஸர் வெளியிடு  – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 7 views
தல ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் : நடிகர் அஜித்குமார் ரேஸிங் வாழ்க்கை ஆவணப்பட டீஸர் வெளியிடு  – Kumudam

40 நாள் ஈரான் போருக்கு  $17.5 பில்லியன் (ரூ.1.6 லட்சம் கோடி) வீண் விரயம் செய்த இஸ்ரேல் – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 9 views
40 நாள் ஈரான் போருக்கு  $17.5 பில்லியன் (ரூ.1.6 லட்சம் கோடி) வீண் விரயம் செய்த இஸ்ரேல் – Kumudam

அர்ஜென்டினாவில் நடந்த 4 போட்டிகள் கொண்ட தொடரை சமன் செய்தது இந்திய மகளிர் ஹாக்கி அணி

  • By admin
  • April 19, 2026
  • 8 views
அர்ஜென்டினாவில் நடந்த 4 போட்டிகள் கொண்ட தொடரை சமன் செய்தது இந்திய மகளிர் ஹாக்கி அணி

சி.எஸ்.கே-வின் போராட்டம் வீண்… பவுலிங்கிலும் கலக்கிய ஐதராபாத் அசத்தல் வெற்றி

  • By admin
  • April 19, 2026
  • 7 views
சி.எஸ்.கே-வின் போராட்டம் வீண்… பவுலிங்கிலும் கலக்கிய ஐதராபாத் அசத்தல் வெற்றி

ஐபிஎல் 2026ல் ரிங்கு சிங்கின் மோசமான ஆட்டத்திற்கு 3 முக்கிய காரணங்கள்

  • By admin
  • April 19, 2026
  • 6 views
ஐபிஎல் 2026ல் ரிங்கு சிங்கின் மோசமான ஆட்டத்திற்கு 3 முக்கிய காரணங்கள்
.site-info { display: none; }