கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
சென்னையில் ஃபேஸ்புக் விளம்பரம் மூலம் வலைவிரித்து, அப்பாவிகளிடம் மோசடி செய்தவர்கள் சிக்கியது எப்படி?
சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில் 51 லட்சம் ரூபாயை மோசடி செய்த 4 பேர் கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். ஃபேஸ்புக் விளம்பரம் மூலம் வலைவிரித்து, அப்பாவிகளிடம் மோசடி செய்தவர்கள் சிக்கியது எப்படி?
“ஏமாறுகிறவன் இருக்கும்வரை ஏமாற்றுபவன் ஏமாற்றிக் கொண்டுதான் இருப்பான்” என்ற சினிமா டயலாக்கை உண்மையாக்கும் வகையில் நாள்தோறும் ஆன்லைன் மோசடி அரங்கேறுவது வாடிக்கையாகிவிட்டது. தெரியாத எண்களில் இருந்து வரும் செல்போன் அழைப்பு, மெசேஜ், லிங்க் ஆகியவற்றால் மோசடி வலைவிரிப்பது குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தியபோதும் அப்பாவிகள் பாதிக்கப்படுவது தொடர் கதையாகவே உள்ளது. இணையவழி மோசடிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
சென்னை ஆவடியைச் சேர்ந்தவர் 42 வயதான ஜாகீர் உசேன். இதேபோன்று அயப்பாக்கத்தைச் சேர்ந்தவர் 49 வயதான அருண் கிருஷ்ண ராஜா. இவர்கள் இருவரும் சிறுக சிறுக சேர்த்த பணத்தை முதலீடு செய்து லாபம் ஈட்டுவதற்கு கடந்த ஆண்டு முடிவு செய்துள்ளனர். அந்த நேரம் பார்த்து அவர்களுக்கு என்றாற்போல் வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் ‘ஆன்லைன் டிரேடிங்’ தொடர்பாக விளம்பரம் வந்துள்ளது.
உடனே சற்றும் தாமதிக்காமல் அதில் குறிப்பிட்டிருந்த செல்போன் எண்ணுக்கு பேசியுள்ளனர். அப்போது எதிர்திசையில் பேசியவர்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு ஏற்ப மும்மடங்கு லாபம் கிடைக்கும் என்று கூறியுள்ளனர். அதைக் கேட்டு ஜாக்பாட் அடித்ததாக நினைத்துக் கொண்ட ஜாகீர் உசேன், மர்ம நபர்கள் கூறிய வங்கிக் கணக்குகளில் 28 லட்சத்து 70 ஆயிரம் அனுப்பியுள்ளார். இதேபோன்று அருண் கிருஷ்ண ராஜா 23 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளார்.
ஆனால், ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்த பணத்திற்கு எந்தவொரு லாபமும் வராமல் இருந்துள்ளது. மேலும், முதலீடு செய்த பணமும் கிடைத்த பாடில்லை. இதையடுத்துதான் இருவரும் ஆசை வார்த்தையை நம்பி, மொத்த உழைப்பையும் இழந்ததை உணர்ந்துள்ளனர். பின்னர், ஆவடி சைபர் கிரைம் பிரிவில் கடந்த ஆண்டு புகார் அளித்துள்ளனர். புகாரின்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து பணம் அனுப்பிய வங்கிக் கணக்குகளின் அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்தினர். அதில், மோசடியில் ஈடுபட்ட தருமபுரியைச் சேர்ந்த ஆறுமுகம், பாக்கியராஜ் மற்றும் திருப்பூரைச் சேர்ந்த கணேசமூர்த்தி, தினகரன் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கைதான நான்கு பேரும் தரகராக செயல்பட்டது தெரியவந்தது. இவர்கள்தான் அப்பாவி மக்களிடம் ஆசைவார்த்தை கூறி நம்ப வைத்து முதலீடு செய்ய வைத்துள்ளனர். தொடர்ந்து முதலீடு செய்ய வைக்கும் மோசடித் தொகைக்கு ஏற்ப ‘கமிஷன்’ தொகை பெற்றுள்ளனர். தற்போது இடைத்தரகர் போன்று செயல்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால், திரைமறைவில் இருந்து இவர்களை இயக்கி, மாஸ்டர் மைண்டாக செயல்பட்டவர்களை கூண்டோடு கைது செய்த போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில் 51 லட்சம் ரூபாயை மோசடி செய்த 4 பேர் கும்பல் கைது செய்யப்பட்ட சம்பவம், ஆவடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மார்ச் 26, 2026 10:29 PM IST