சென்னை நங்கநல்லூர் தில்லை கங்காநகர் பகுதியைச் சேர்ந்தவர் 52 வயதான சுப்பிரமணியன். இவரது மனைவி 42 வயதான நாகலட்சுமி. இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். குழந்தை குடும்பம் என்று ஆன போதும் சுப்பிரமணியன் பொறுப்பற்ற குடும்பத் தலைவனாக இருந்துள்ளார். வேலைக்கு ஏதும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து கொண்டு மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.
அடிக்கடி மனைவியிடம் செலவிற்கு பணம் கேட்டும் குடைச்சல் கொடுத்துள்ளார். இதனால், கணவன் – மனைவிக்கு இடையே அடிக்கடி மோதல் வெடித்துள்ளது. இது தொடர் கதையானதால் சில ஆண்டுகளுக்கு முன் மனைவியிடம் கோபித்து கொண்டு வீட்டை விட்டு சுப்பிரமணியன் வெளியேறியுள்ளார். பின்னர், மதுரையில் உள்ள சகோதரி வீட்டில் தஞ்சமடைந்துள்ளார்.
மறுபுறம் நாகலட்சுமி தனது சொந்த காலில் முன்னேற வேண்டும் என்ற வேட்கையில் வெறித்தனமாக உழைத்துள்ளார். அதற்காக நங்கநல்லூர் பகுதியில் பெண்களுக்கான பிரத்யேக புடவைகள் விற்பனை கடை ஒன்றை ஆரம்பித்துள்ளார். இன்ஸ்டாகிராம் உட்பட சமூக வலைதளங்கள் மூலம் தனது கடையை பிரபலப்படுத்தியுள்ளார்.
அத்துடன், தானே ஒரு விளம்பர மாடலாக உருவெடுத்து பெண்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளார். தன்னம்பிக்கை, தொழில் வளர்ச்சிக்கு இடையே தனது இரு மகன்களையும் நன்றாக படிக்க வைத்துள்ளார். இதில், 21 வயதான முதல் மகன் ஹரிஷ் பரத்வாஜ் ரஷ்யாவில் இரண்டாம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். 18 வயதான இரண்டாவது மகன் சைலாஷ் சென்னையில் உள்ள பல்மருத்துவக் கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இதனிடையே நாகலட்சுமியின் தொழில் வளர்ச்சியை இன்ஸ்டாகிராம் மூலம் அவரது கணவர் சுப்பிரமணியன் பார்த்துள்ளார். அதில் வரும் வீடியோக்களையும், அவரின் அசுர வளர்ச்சியையும் கண்டு மிரண்டு போயுள்ளார். இதையடுத்து, தனது மனைவி மற்றும் மகன்களுடன் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளார். இதற்காக, திடீரென மனைவிக்கு போன் செய்து இருவரும் சேர்ந்து வாழலாம் எனக் கூறியுள்ளார்.
முதலில் அதற்கு நாகலட்சுமி மறுப்பு தெரிவித்துள்ளார். இருந்தபோதும் தொடர்ந்து பலமுறை போன் செய்து தனது தவறுக்கெல்லாம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக கூறி கெஞ்சிக் கூத்தாடியுள்ளார். “இனிமேல் ஒழுங்காக உன்னுடனே சேர்ந்து வாழுவேன்” என்று உறுதியளித்துள்ளார். இதனால் மனம் இறங்கிய மனைவி அதற்கு ஒப்புக்கொண்டுள்ளார். மனைவி பச்சைக் கொடி காட்டியதும் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு மதுரையில் இருந்து கிளம்பிய சுப்பிரமணியன் சென்னைக்கு வந்துள்ளார்.
திங்கட்கிழமை அன்று கல்லூரி சென்றிருந்த இரண்டாவது மகன் சைலாஷுக்கு செல்போனில் மெசேஜ் ஒன்றை சுப்பிரமணியன் அனுப்பி உள்ளார். அதில், நானும், அம்மாவும் இனி இருக்க மாட்டோம் என்றும், உனக்கு சாப்பாடு வைத்திருக்கிறேன் வந்து சாப்பிடு எனவும் அனுப்பியுள்ளார். அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சைலாஷ் பதறியடித்துக் கொண்டு வீட்டிற்கு ஓடி வந்துள்ளார்.
வீட்டில் உள்ள ஒரு அறையில் தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் வெட்டுக் காயம் பட்டு நாகலட்சுமி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். அதைக் கண்டு மகன் சைலாஷ் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார். மற்றொரு அறையில் சுப்பிரமணியன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆதம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
இருவரின் உடலையும் மீட்டு உடற்கூராய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்ட விசாரணையில் சம்பவத்து அன்று பிற்பகலில் தம்பதி இடையே மீண்டும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது தெரியவந்தது. பின்னர் கோபமாக வீட்டை விட்டு சுப்பிரமணியன் வெளியேறியுள்ளார்.
சிறிது நேரத்தில் அரிவாளை வாங்கிக் கொண்டு திரும்பியவர் மனைவி நாகலட்சுமியை தாக்கி சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளார். தொடர்ந்து, மகனுக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும், நாகலட்சுமி கொலைக்கும், சுப்பிரமணியன் தற்கொலைக்கும் தம்பதி இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
கணவன் பிரிந்து சென்றபோதும் தனியாளாக போராடிய பெண், தனது இரு மகன்களை மருத்துவம் படிக்க வைத்து தொழிலிலும் சாதித்துள்ளார். இந்த நிலையில் பிரிந்து சென்ற கணவன் கெஞ்சிக் கூத்தாடி மீண்டும் சேர்ந்து வாழ ஆரம்பித்த பத்து நாட்களிலேயே மனைவியை கொடூரமாக வெட்டிக் கொலை செய்துவிட்டு, தனது உயிரையும் மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.