கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்துக்கு சென்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “நண்பர் என்ற முறையில் மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபியை சந்தித்துப் பேசியதாக விளக்கமளித்தார்.
திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக இழுபறி நீடிப்பதை தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்களை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திடீரென சந்தித்து பேசினார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் ஆறு இடங்களில் போட்டியிட்டு இரு இடங்களில் மார்க்சிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது. தற்போது அதைவிடக் கூடுதலான தொகுதிகளை மார்க்சிஸ்ட் கேட்டது. ஆனால் கடந்த தேர்தலைவிட ஓரிடத்தைக் குறைத்து 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க திமுக முன்வந்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த முறையைப் போல் 6 தொகுதிகளையாவது ஒதுக்க வேண்டும் என சிபிஎம் வலியுறுத்தி வருகிறது. இதனால் திமுக-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையே தொகுதிப் பங்கீடு மூன்று சுற்றுப் பேச்சுவார்த்தைகள் முடிந்தபோதிலும் இன்னமும் உடன்பாடு எட்டப்படவில்லை.
இந்நிலையில் வரும் 23ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று அவசரமாகக் கூடியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து மதியம் மாநிலக் குழுக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் தொகுதிப் பங்கீடு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சிபிஎம் கட்சியின் மாநில அலுவலகத்துக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று திடீரெனச் சென்றார். அங்கு சிபிஎம் அகில இந்தியப் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி உள்ளிட்ட தலைவர்களுடன் வைகோ ஆலோசனை நடத்தினார்.
இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி மாநிலங்களவையில் எனக்கு சக உறுப்பினர் மட்டுமல்ல, எல்லையற்ற அன்பு வைத்திருக்கிறார். எனக்கும் அவருக்கும் நல்ல நட்பு இருக்கிறது. அவர் வந்திருக்கிறார் என்று டிவியில் பார்த்தேன். உடனே புறப்பட்டு வந்து அவரைச் சந்தித்தேன். புகைப்படம் எடுத்துக்கொண்டேன். அவருடைய பணிகள் தொடரட்டும்” என்றார்.
மார்ச் 21, 2026 12:12 PM IST
திமுக – மார்க்சிஸ்ட் இடையே தொகுதி பங்கீட்டில் தொடரும் இழுபறி… சமாதான பேச்சுவார்த்தைக்கு சென்றாரா வைகோ?