கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
சிதம்பரத்தில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் பூத் செலவிற்காக கொடுக்கப்பட்ட பணத்தை பிரித்துக் கொள்வதில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில், மாறி மாறி தாக்கிக் கொண்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது
சிதம்பரத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், கட்சி நிர்வாகிகளிடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருவரை ஒருவர் இரும்பு கம்பியால் தாக்கிக் கொள்ளும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.
கடந்த 22-ஆம் தேதி இரவு, சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் பாஜக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாஜக சிதம்பரம் நகரத் தலைவர் குமார் மற்றும் மாவட்ட பொதுச் செயலாளர் அகத்தியர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் போது, பூத் செலவிற்காக ஒதுக்கப்பட்ட பணத்தைப் பிரித்துக் கொள்வதில் குமார் மற்றும் அகத்தியர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகராறின் போது குமார், அகத்தியரை சாதி ரீதியாக இழிவாகப் பேசியதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அகத்தியர் மற்றும் அவரது ஆதரவாளர் ராகேஷ் ஆகிய இருவரும், மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால் குமாரைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
இந்த மோதலில் காயமடைந்த குமார், சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விடுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான தாக்குதல் காட்சிகள் தற்போது வெளியாகி, அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏப்ரல் 27, 2026 10:19 PM IST