கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டியில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட கோர விபத்தில் 25 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்
விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, தலா 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு மீதான விசாரணையை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்தது.
விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டியில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட கோர விபத்தில் 25 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி, மதுரையைச் சேர்ந்த விடியல் எஸ். வீரபெருமாள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
மனுதாரர் தனது மனுவில், விபத்தில் பலியான 25 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 20 லட்சம் இழப்பீட்டுத் தொகையும், 50 சதவீதத்திற்கும் மேல் தீக்காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 15 லட்சம் இழப்பீட்டுத் தொகையும், 25 முதல் 50 சதவீதம் வரை தீக்காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 10 லட்சம் இழப்பீட்டுத் தொகையும் வழங்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கைகள் மற்றும் விபத்து குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
மேலும், பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்பாக ஏற்கனவே நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மற்ற பொதுநல வழக்குகளுடன் இந்த மனுவையும் இணைத்து பட்டியலிட நீதிபதிகள் ஆணையிட்டனர். இதனைத் தொடர்ந்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூன் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.