கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
சேலம் அருகே நேர்ந்த கோர விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் அருகே நேர்ந்த கோர விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி ஒரு அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்நிலையில், உத்தமசோழபுரத்தை அடுத்த சூளைமேடு பகுதியில் வந்துகொண்டிருந்தபோது அரசு பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் வந்த மினி டெம்போ மற்றும் இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த மணிகண்டன் மற்றும் அவரது தாயார் இருசாயி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
இதையடுத்து படுகாயம் அடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் மினி டெம்போவில் வந்த 11 மாத குழந்தை ஜீவிகா 5 வயது குழந்தை நிதிஷ்கா, இரண்டு மாத கர்ப்பிணி பெண் சத்யா உள்ளிட்ட 6 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். மேலும் இந்த கோர விபத்து குறித்து தகவல் அறிந்த சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார். விசாரணைக்கு பின்னரே விபத்துக்கான காரணம் குறித்து தெரியும் என ஆட்சியர் கூறினார்.
நெய்க்காரப்பட்டி அருகே உள்ள குலதெய்வம் கோவிலுக்கு மினி டெம்போவில் வந்து கொண்டிருந்தபோது நேர்ந்த இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. படு காயமடைந்த ஆறு பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விபத்திற்கு காரணமான அரசு பேருந்து ஓட்டுநர் மேட்டூரை சேர்ந்த அய்யன்துரையை கைது செய்து விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.