கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் உள்ள குடோனில் ஒரே நேரத்தில் 100 கிலோ கஞ்சா பண்டல் பண்டலாக பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 100 கிலோ கஞ்சா, ஒரே இடத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கஞ்சா கும்பல் கூண்டோடு சிக்குமா?
கோவை மாநகரில் கஞ்சா புழக்கத்தை ஒழிக்க, போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் இரவு, பகலாக சோதனைச் சாவடிகள் மற்றும் பல்வேறு முக்கிய சாலைகளில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சூழலில் குனியமுத்தூர் – இடையர்பாளையம் சாலையில் உள்ள கருவேப்பிலை தோட்டம் பகுதியில் கஞ்சா கும்பல் நடமாடுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
உடனே சற்றும் தாமதிக்காமல், தனியாருக்குச் சொந்தமான கார் உதிரி பாகங்கள் சேமித்து வைக்கப்படும் குடோனில் போலீசார் அதிரடி சோதனையில் இறங்கினர். ஒரு இடம்விடாமல் மூலைமுடுக்கெல்லாம் போலீசார் சல்லடை போட்டு தேடினர். அப்போது, பண்டல் பண்டலாக பல வேறு இடங்களில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து நடத்திய சோதனையில் கார் உதிரி பாகங்கள் குடோன், கஞ்சா குடோனாக செயல்பட்டதும் அம்பலமானது. இறுதியில், 100 கிலோ அளவில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஜென்னி ஜேக்கப், அப்பாஸ், ரூபன் மற்றும் கேரளாவைச் சேர்ந்த நவ்பில் ஆகிய 4 பேரை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணையை தீவிரப்படுத்தினர்.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா எங்கிருந்து கடத்தி வரப்பட்டது? அதை எங்கெல்லாம் விற்பனைக்கு கொண்டு செல்ல திட்டமிட்டனர்? இந்த கும்பலுக்கு பின்னணியில் பெரிய நெட்வொர்க் ஏதேனும் உள்ளதா? என்பது குறித்தும் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள நபர்களைப் பிடிக்க தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் போலீசார் இறங்கியுள்ளனர்.
மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் உள்ள குடோனில் ஒரே நேரத்தில் 100 கிலோ கஞ்சா பண்டல் பண்டலாக பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.