கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
Woman’s Day Special| இளநீர் விற்று பிள்ளைகளின் கனவுகளை காப்பாற்றும் தாய் இலக்கியா குறித்த மகளிர் தின சிறப்பு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
வாழ்க்கையின் கடினமான பாதைகளிலும் தன்னம்பிக்கையை தோளில் சுமந்து முன்னேறும் பெண்கள் தான் இந்த சமூகத்தின் உண்மையான சக்தி. குடும்பத்தையும் கனவுகளையும் சமநிலைப்படுத்தி, சவால்களை சாதனைகளாக மாற்றும் இவர்களின் பயணம் தான் மகளிர் தினத்தின் உண்மை அர்த்தம். சாதாரண சூழலில் இருந்து அசாதாரண உயரங்களை அடையும் பெண்களின் கதைகள், இன்று பலருக்கும் ஊக்கமாக மாறியுள்ளன. அந்த வகையில் புதுக்கோட்டையில் சாலையோர இளநீர் கடை நடத்தி வரும் இளம்பெண் இல்லை இல்லை இரும்பு மனுசி இலக்கியா குறித்த ஒரு சிறப்பு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
புதுக்கோட்டையில் ஜெயில் ரோடு பெட்ரோல் பங்க் பக்கத்தில் இளநீர் கடை வைத்து நடத்தி வருகிறேன். கடந்த இரண்டு வருடங்களாக இந்த இளநீர் கடையை நடத்தி வருகிறேன். இதற்கு முன்பு பஞ்சு மில்லில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். ஆனால் குழந்தைகளை பார்த்துக்கொள்ள முடியாமல் மறுபடியும் ஊருக்கே வந்து இந்த கடையை நடத்திக்கொண்டிருக்கிறேன். என்னோட கணவர் நான்கு வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். அப்புறம் என்னோட அம்மா, அப்பா, தங்கைகள் அனைவரையும் நான் தான் பார்த்துக்கொண்டிருக்கிறேன் என தன் குடும்ப நிலைமையை அவருக்குரிய பாணியில் பேசினார் இலக்கியா.
இளநீர் கடையை பொருத்தவரை வெயில், மழை காலங்கள் என எல்லா காலத்திலும் கடை போடுவேன், ஆனால் மழை காலத்தில் சுத்தமாக வருமானம் இருக்காது. வெயில் நேரத்தில் ஒரு நாளைக்கு 300 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். இதை வைத்துதான் குடும்பத்தை நடத்திக்கொண்டிருக்கிறேன் என இலக்கியா சொன்ன வார்த்தைகள் நிஜத்தில் வேதனையின் உச்சம் என்று தான் சொல்ல வேண்டும்.
சாலையோர இளநீர் கடை நடத்தி வரும் இலக்கியா
சீசனுக்கு ஏற்றவாறு தான் வருமானம் வரும். இந்த ஒரு சொற்ப வருமானத்தை வைத்து கிட்டத்தட்ட ஐந்துக்கும் மேற்பட்ட தனது குடும்ப உறுப்பினர்களை இலக்கியா காப்பாற்றி வருகிறார் என்றால் அது சாதாரண விஷயம் அல்ல. இந்த வருமானத்தில் அனைவரையும் திருப்திப்படுத்த முடியாமல் தவிப்பதாக இலக்கியா தழுதழுத்த குரலில் தனது வேதனையை பகிர்ந்து கொண்டார்.
இதில் வருகிற வருவாயை வைத்து என் குழந்தைகளுக்கு கேட்கும் விஷயங்களை கூட என்னால் வாங்கி கொடுக்க முடியாது. என் குழந்தைகள் என்னிடம் கேட்பார்கள், ஏன் அம்மா எப்ப பார்த்தாலும் வேலை என்று ஓடிக்கொண்டே இருக்கிறாய், எங்களுடன் நேரம் செலவழிக்க மாட்டேன்கிறாய் என்று அவர்கள் கேட்கும்போதெல்லாம் எனக்கு மனம் ரொம்ப கஷ்டமாக இருக்கும் எனவும் தனது ஆதங்கத்தை இரும்பு பெண் இலக்கியா கொட்டி தீர்த்தார்.
என்னால் படிக்க முடியாமல் தான் நான் இந்த மாதிரி கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறேன். ஆனால் என் குழந்தைகள் நல்லா படித்து நல்ல வேலைக்கு போய் நல்லா இருக்க வேண்டும் என்றுதான் உழைத்துக்கொண்டிருக்கிறேன். ஏனென்றால் சாலையில் நின்று இளநீர் விற்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது. எல்லா மனிதர்களும் ஒரே மாதிரி பார்க்க மாட்டார்கள் என்ற மிரட்சியுடன் கூடிய பெண்களுக்குரிய அச்சத்தையும் இலக்கியா பகிர்ந்து கொண்டார்.
யார் என்ன சொன்னாலும் அவற்றை எல்லாம் கடந்து வந்து, எனக்கு என் பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் அவ்வளவுதான். அதற்காகத்தான் இவ்வளவு கஷ்டப்படுகிறேன். அதுபோக வேலை செய்து கடனை கட்டி முடிக்க முடியவில்லை. இந்தத் தொழில் மூலம் என்னால் கொஞ்சம் சமாளிக்க முடிகிறது. அதனால்தான் உறுதியுடன் நின்று இந்த தொழிலை நடத்திக்கொண்டிருக்கிறேன் என இலக்கியா கூறும் போது அவரின் தன்னம்பிக்கை, தைரியம், வைராக்கியம் வெளிப்பட்டது.
ஒருவர் கீழ் வேலை செய்து வாழ்வதை விட இந்த தொழில் செய்து குடும்பத்தை பார்த்துக் கொள்வது எனக்கு ஒன்றும் பெருசா கஷ்டம் தெரியவில்லை. இளநீர் வியாபாரம் செய்து என் குடும்பத்தை பார்த்துக் கொள்கிறேன் என்பதில் நான் பெருமையாகத்தான் நினைக்கிறேன். பொருளாதார ரீதியாகவும் இந்த தொழில் எனக்கு ரொம்ப உதவியாக இருக்கிறது. இது எனக்கு சந்தோஷம்தான் என்று தெரிவிக்கிறார் இளநீர் கடை நடத்தி வரும் பெண் இலக்கியா.
இலக்கியா சாதாரணமாக ஒரு பெண் அல்ல, குடும்பத்தின் முதுகெலும்பு, கனவுகளின் காவலர், போராட்டத்தின் உருவம். கண்ணீரை மறைத்து சிரிப்பை பரிசளிக்கும் அவளின் தினசரி வாழ்க்கையே ஒரு பெரிய வெற்றி கதை. தடைகள் எத்தனை வந்தாலும் தன்னம்பிக்கையை ஆயுதமாக்கி முன்னேறும் இலக்கியா போன்ற பெண்களுக்காகவே மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. சாதாரணமாக தோன்றும் அவளின் வாழ்க்கை, உண்மையில் அசாதாரண தைரியத்தின் சாட்சி என்பதே நிதர்சனமான உண்மை.
மார்ச் 07, 2026 12:13 PM IST
“இளநீர் விற்று கனவுகளை காப்பாற்றும் தாய்”- குடும்பத்தின் முதுகெலும்பான ‘இரும்பு மனுஷி’ இலக்கியா…