2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அதிமுக கூட்டணியில் பாஜக இணைந்துள்ள நிலையில், அவர்களுக்கு எந்த எந்த தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. சென்னையில் சில தொகுதிகளும், தென்மாவட்டங்களில் சில தொகுதிகளும் ஒதுக்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி, பாஜகவின் கோட்டையாக கருதப்படுகிறது. இங்கு தற்போது பாஜக எம்.எல்.ஏவாக உள்ள மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி, வயது மூப்பு காரணமாக வரவிருக்கும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அடுத்த பாஜக வேட்பாளர் யார் என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
மேலும் படிக்க – திமுக கூட்டணி! தேமுதிகவிற்கு எத்தனை தொகுதிகள்? காங்கிரஸ் வெளியேறுகிறதா?
எம்.ஆர்.காந்தி விலகல்?
பாஜகவின் மூத்த தலைவரும், ஆர்.எஸ்.எஸ் பின்புலம் கொண்டவருமான எம்.ஆர்.காந்தி, நாகர்கோவில் தொகுதியில் கடந்த தேர்தலில் திமுகவின் சுரேஷ்ராஜனை வீழ்த்தி வெற்றி பெற்றார். தொகுதி மக்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் அவர், வயது மூப்பு காரணமாக தேர்தல் அரசியலிலிருந்து ஓய்வு பெற விரும்புவதாக கூறப்படுகிறது. இது பாஜகவிற்கு ஒரு பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. எம்.ஆர்.காந்திக்கு பிறகு நாகர்கோவில் தொகுதியில் போட்டியிடப் பலரும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். அவர்களில் முன்னிலையில் இருப்பவர் சதீஷ் ராஜா. கன்னியாகுமரி மாவட்டம் தெற்கு தாமரைக்குளத்தை சேர்ந்த இவர், பாஜகவின் மாநில வர்த்தக பிரிவுத் தலைவராக உள்ளார்.
யார் இந்த சதீஷ் ராஜா?
சாதாரண குடும்பத்தில் பிறந்த சதீஷ் ராஜா, 2014ல் பாஜகவில் இணைந்து அடிப்படை தொண்டராக பயணத்தை தொடங்கினார். சிறு வயது முதலே சமூக சேவையில் ஆர்வம் கொண்ட இவர், உள்ளூர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். கட்சி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு, படிப்படியாக உயர்ந்து தற்போது மாநில பொறுப்பில் உள்ளார். பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது அவரை சந்தித்தது, சதீஷ் ராஜாவின் வேட்பாளர் வாய்ப்பை மேலும் பிரகாசமாக்கியுள்ளது.
பிற போட்டியாளர்கள்
சதீஷ் ராஜாவை தவிர, நாகர்கோவில் மாநகராட்சியின் முன்னாள் மேயர் மீனாதேவ் பெயரும் வேட்பாளர் பட்டியலில் அடிபடுகிறது. இவரும் பாஜகவின் நீண்டகால உறுப்பினராகவும், தொகுதியில் நன்கு அறியப்பட்ட முகமாகவும் உள்ளார். பொன்.ராதாகிருஷ்ணன் போன்ற மூத்த தலைவர்களின் ஆதரவு யாருக்கு கிடைக்கும் என்பது வேட்பாளர் தேர்வில் முக்கிய பங்கு வகிக்கும்.
திமுகவின் வியூகம் என்ன?
பாஜக வேட்பாளர் மாற்றம் ஒருபுறம் இருக்க, திமுகவும் இத்தொகுதியை கைப்பற்ற தீவிரமாக திட்டமிட்டுள்ளது. திமுக சார்பில் நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் அல்லது முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் மீண்டும் களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. நாகர்கோவில் தொகுதி, படித்தவர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் அதிகம் வசிக்கும் பகுதியாகும். இங்கு மத ரீதியிலான வாக்குகளும் தேர்தல் முடிவுகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. பாஜக, திமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் இங்கு வலுவான வாக்கு வங்கி உள்ளது. எனவே, வேட்பாளர் தேர்வு என்பது இரு கட்சிகளுக்கும் மிக முக்கியமான சவாலாக இருக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் – @ZEETamilNews
ட்விட்டர் – @ZeeTamilNews
டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android இணைப்பு: https://bit.ly/3AIMb22
ஆப்பிள் இணைப்பு: https://apple.co/3yEataJ