கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் 5 பேர் கொண்ட கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கூலித் தொழிலாளியை அடித்தே கொலை செய்த 5 இளைஞர்களை, போலீசார் கூண்டோடு கைது செய்துள்ளனர். மது போதையில் ஆத்திரம் தீர வெறிச்செயலில் ஈடுபட்டதன் பின்னணி என்ன?
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டியைச் சேர்ந்தவர் 33 வயதான மாரியப்பன். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 பெண் குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை விட்டுப் பிரிந்தவர், பழைய பாட்டில்களை விற்பனை செய்யும் கடையில் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 11ம் தேதி அன்று ராஜபாளையம் அருகேயுள்ள அழகாபுரி தக்காளி தோப்பு பகுதியில் தலையில் ரத்த காயத்துடன் மாரியப்பன் இறந்து கிடந்தார். தகவலறிந்து சென்ற போலீசார் உடலை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், பிரேத பரிசோதனையில் மாரியப்பன் அடித்தே கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனால், சந்தேக மரணத்தை கொலை வழக்காக மாற்றிய போலீசார், கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
அதில் வடக்கு மலையடிப்பட்டியைச் சேர்ந்த முத்துலிங்கம், டேனியல், தங்கபாண்டியன் உள்ளிட்ட 5 பேர் விசாரணையில் சிக்கினர். கைதான 5 பேரும் சம்பவத்தன்று மாரியப்பனுடன் ஒன்றாக மது அருந்தி உள்ளனர். அப்போது மது போதையில் திடீரென ஏற்பட்ட தகராறில் 5 பேரும் சேர்ந்து, மாரியப்பனை மதுபாட்டில் மற்றும் கட்டையால் தாக்கி துடிதுடிக்க கொலை செய்துள்ளனர். பின்னர், உடலை அங்கேயே வீசிவிட்டு ஆளுக்கொரு திசையில் தப்பித்துள்ளனர்.
இக்கொடூர சம்பவம் விசாரணையில் உறுதியானதை தொடர்ந்து முத்துலிங்கம், டேனியல், தங்கபாண்டியன் உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 5 பேரில் முத்துலிங்கம் மீது ஏற்கனவே சோலைராஜ் என்பவரை கொலை செய்த வழக்கு, கஞ்சா விற்பனை, பேருந்து கண்ணாடி உடைப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.