கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
திருச்சி மேற்கு திமுக வேட்பாளர் கே.என். நேரு பிரச்சாரத்தில், 6 வயது சாய்ஸ்ரீ திமுக ஆட்சிச் சாதனைகள், மக்கள் நலத்திட்டங்கள் குறித்து உரையாற்றி கவனம் ஈர்த்தார்
திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான கே.என். நேரு, தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். குறிப்பாக கருமண்டபம் பிரச்சாரத்தின் போது அவரை ஆதரித்து பேசிய 6 வயது சிறுமி சாய்ஸ்ரீ தனது உரையால் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தார்.
சிறுமி சாய் ஸ்ரீ பேசியதாவது: “அடுப்பு ஊதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு?” என்ற எண்ணம் நிலவிய காலகட்டத்தில், 1989-ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி கொண்டு வந்த பெண்கள் சொத்துரிமை சட்டம் ஒரு பெரிய சமூகப் புரட்சி.
நமது தாத்தா, பாட்டி கூட நினைத்துப் பார்க்காத உரிமையை கலைஞர் நமக்குக் கொடுத்தார்” என பேசிய அவர், தற்போதைய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசின் சாதனைகளை விளக்கினார். தொடர்ந்து, காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், இல்லம் தேடி மருத்துவம் போன்ற மக்கள் நலத்திட்டங்களால் பொதுமக்கள் பலனடைந்துள்ளதாக கூறினார்.
மேலும், இந்த இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது, முடக்கவும் முடியாது என்று தெரிவித்த சிறுமி, இறுதியாக உங்கள் வாக்கு உதயசூரியனுக்கே என்ற முழக்கத்துடன் தனது உரையை நிறைவு செய்தார்.
சிறுமி பேசும்பொழுது சிறுமியின் பேச்சை கண்டு ஆச்சரியப்பட்டு அமைச்சர் கே.என். நேரு சிரித்தார். இந்த நிகழ்வு பிரச்சாரத்தில் கலந்து கொண்ட பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
ஏப்ரல் 09, 2026 10:21 PM IST