கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்த நடிகை, இளைஞர் ஒருவரை நம்பிக்கை மோசடி செய்த குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோடிக்கணக்கில் கறந்து கல்தா கொடுத்த புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?
தெலுங்கு நடிகை அன்ஷு ரெட்டி திருமண ஆசைவார்த்தை கூறி சாப்ட்வேர் இன்ஜினியரை ஏமாற்றியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. 9 கோடியே 35 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படும் பரபரப்பு குற்றச்சாட்டின் பின்னணி என்ன?
சினிமா மற்றும் வெப் சீரிஸ் மூலம் தெலங்கானாவில் மிகவும் பிரபலமானவர் தான் நடிகை அன்ஷு ரெட்டி. தனக்கு கிடைத்த புகழ் வெளிச்சத்தைப் பயன்படுத்தி விளம்பரங்களில் ஜொலித்தவர் லட்சக்கணக்கில் சம்பாதித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்த நடிகை, இளைஞர் ஒருவரை நம்பிக்கை மோசடி செய்த குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோடிக்கணக்கில் கறந்து கல்தா கொடுத்த புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?
தெலங்கானாவை சேர்ந்த நடிகை அன்ஷு ரெட்டி, ஆரம்பத்தில் மாடலிங் துறையில் தடம் பதித்துள்ளார். அதன் மூலம் சினிமா மற்றும் வெப் சீரிஸ் வாய்ப்புகள் தேடி வந்துள்ளன. அதேவேளையில் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருந்துள்ளார். இன்ஸ்டாவில் இவர் பதிவிடும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் லைக்ஸ் அள்ளியுள்ளது. ஏராளமான பாலோயர்களை கொண்ட நடிகையை, பல்வேறு நிறுவனங்கள் விளம்பர தூதுவராக்கியுள்ளது.
புகழ் வெளிச்சம் அடைந்த நடிகைக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு தர்மேந்திரா என்ற இளைஞர் அறிமுகம் ஆகியுள்ளார். சாப்ட்வேர் இன்ஜினியரான தர்மேந்திரா லண்டனில் பணியாற்றி வந்துள்ளார். ஆரம்பத்தில் நட்பாக பழகிய நடிகை, ஒரு கட்டத்தில் இளைஞரிடம் தனது காதலை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் இருவரும் நெருக்கமானதும் இரு வீட்டாரிடமும் திருமண பேச்சு அடிபட்டுள்ளது.
தொடர்ந்து தர்மேந்திராவை திருமணம் செய்து கொள்வதாக நடிகை அன்ஷு ரெட்டி உறுதியளித்ததாக தெரிகிறது. தனது வருங்கால மனைவிக்காக எதையும் செய்வேன் என்று தர்மேந்திராவும் வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளார். அதை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட நடிகை அடிக்கடி அவரிடம் கோடிக்கணக்கில் பணத்தை கறந்துள்ளார். மேலும், வெளிநாட்டில் இருந்து தங்க, வைர ஆபரணங்களையும் வாங்கி அழகுபார்த்துள்ளார்.
தொடர்ந்து தர்மேந்திராவிடம் இருந்து பணம், நகைகள் வாங்கியதுடன் அசையா சொத்துகளையும் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால், கல்யாணத்துக்கு நாள் குறிப்பது குறித்து இளைஞர் கேட்ட போதெல்லாம் நடிகை தட்டிக் கழித்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் நடிகை தன்னை நம்பிக்கை மோசடி செய்ததை அறிந்து கொண்ட சாப்ட்வேர் இன்ஜினியர் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதைக் கேட்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பின்னர், தர்மேந்திராவின் தந்தை ஐதராபாத்தில் உள்ள சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதில், தனது மகனை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய நடிகை, 9 கோடியே 35 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணையை தொடங்கியுள்ளனர்.
மேலும், நடிகையை அழைத்து விசாரணை நடத்தவும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லண்டன் மாப்பிள்ளையிடம் திருமண ஆசைவார்த்தை கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த குற்றச்சாட்டில் நடிகை அன்ஷு ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் ஐதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை (மெட்ராஸ்), சென்னை, தமிழ்நாடு