பிரசாந்த் நடிப்பில் தியாகராஜன் இயக்க உள்ள ரஞ்ஜன் படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் தேவயானியின் மகள் பிரியங்கா ராஜகுமாரன். அதைப்பற்றி பார்க்கலாம்.
நடிகர் பிரசாந்த் நடிக்கும் புதிய படத்திற்கு ‘ரஞ்ஜன் தி அட்வகேட்’ என அதிகாரப்பூர்வமாக பெயர் வைத்துள்ளனர். தெலுங்கில் வெற்றி பெற்ற கோர்ட் டிராமா படமான ‘கோர்ட் ஸ்டேட் vs எ நோபடி’யின் தமிழ் ரீமேக்தான் இது. பிரசாந்தின் 53வது பிறந்தநாளில் இந்த அறிவிப்பு வெளியானது. இதன் மூலம், இந்த ரீமேக் பற்றிய வதந்திகளுக்கு படக்குழு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. பிரபல நடிகரும், இயக்குநருமான தியாகராஜன் இந்தப் படத்தை இயக்குகிறார். இவரே படத்தின் தமிழ் ரீமேக் உரிமையையும் வாங்கியுள்ளார். தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலமாகவே இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
இதற்கு முன்பும் அப்பா-மகன் காம்போவில் பல ரீமேக் படங்கள் வந்துள்ள நிலையில், மீண்டும் இந்த ஜோடி இணைவது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தில் பல புதுமுகங்கள் அறிமுகமாகிறார்கள். நடிகை தேவயானியின் மகள் பிரியங்கா ராஜகுமாரன் மற்றும் தயாரிப்பாளர் கதிரேசனின் மகன் ஹரி ஆகியோர் ஹீரோ – ஹீரோயினாக நடிக்கின்றனர். மற்ற நடிகர், நடிகைகள் பற்றிய விவரங்களை படக்குழு விரைவில் அறிவிக்கும். தெலுங்கில் ராம் ஜெகதீஷ் இயக்கிய இந்தப் படத்தில், பிரியதர்ஷி முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். வெளியான சமயத்தில், இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்றது. குறிப்பாக, போக்சோ சட்டத்தின் சிக்கல்களையும், செல்வாக்கு மிக்கவர்கள் எப்படி நீதித்துறையைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதையும் இந்தப் படம் பேசியது.
தமிழ் ரீமேக்கிற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ரவி யாதவ் ஒளிப்பதிவு செய்ய, செந்தில் ராகவன் தயாரிப்பு வடிவமைப்பாளராகப் பணியாற்றுகிறார். படத்தின் ஷூட்டிங் தொடங்கி, விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ‘அந்தகன்’ வெற்றிக்குப் பிறகு, பிரசாந்த் மீண்டும் ஒரு ரீமேக் படத்தில் நடிப்பதால், ‘ரஞ்ஜன் தி அட்வகேட்’ தமிழ் ரசிகர்களுக்கு ஒரு புதுவித அனுபவத்தைக் கொடுக்கும் என படக்குழு நம்புகிறது. இப்படத்தின் துவக்க விழாவில் நடிகை தேவயானியும் கலந்துகொண்டார். இதுதவிர நடிகர் விஷாலும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு படக்குழுவுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தார்.
அந்தகன் திரைப்படம் கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, 2024-ல் தான் ரிலீஸ் ஆனது. அதுபோல் இழுத்தடிக்காமல், கோர்ட் ரீமேக்கான ரஞ்ஜன் திரைப்படத்தை சீக்கிரம் ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இப்படம் மட்டும் பிரபல கமர்ஷியல் டைரக்டரான ஹரி இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கிறார் பிரசாந்த். நடிகர் பிரசாந்த் முன்னதாக அப்பு என்கிற திரைப்படத்தில் நடிகை தேவயானிக்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது அவரது மகள் பிரியங்கா உடன் ஒரே படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போதே அதிகரித்து உள்ளது.