ஈரான் மற்றும் இஸ்ரேல், அமெரிக்க நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் வீட்டு சமையல் கேஸ் சிலிண்டர் விலை சமீபத்தில் 60 ரூபாய் அதிகரிக்கப்பட்டது.
இந்த நிலையில் கேஸ் விநியோகத்தை சீராகப் பராமரிக்கவும், பதுக்கலைத் தவிர்க்கவும் மத்திய அரசு சிலிண்டர் முன்பதிவுக்கான கால அவகாசத்தை அதிகரித்துள்ளது. அதன்படி 21 நாள்களாக இருந்த குறைந்தபட்ச காத்திருப்பு காலம் 25 நாள்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக இணைப்புகளை விட, வீட்டு உபயோக LPG உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுக்கவும் எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் வணிக கேஸ் சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால், சென்னையில் உள்ள உணவகங்கள் செயல்பட முடியாத நிலைக்கு தள்ளப்படும் என உணவகங்கள் உரிமையாளர்கள் சங்கத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் பெங்களூருவில் இன்று முதல் உணவகங்கள் செயல்படாது என அறிவிக்கப்பட்ட நிலையில், சென்னையிலும் உணவகங்கள் மூடக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.
இதனிடையே, கோவையில் செயல்படும் பிரபல உணவகமான அன்னபூர்ணா ஒன்று, சில முக்கியமான உணவுகளை மட்டுமே வழங்கப்படும் என தங்களது உணவு பட்டியலை குறைத்துள்ளது. இது தொடர்பாக அந்த ஹோட்டல் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மத்திய கிழக்கு நாடுகளில் நிலவிவரும் புவிசார் அரசியல் நெருக்கடி காரணமாக எல்பிஜி எரிவாயு வழங்கலில் கட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளது.
எல்பிஜி எரிபொருள் தினசரி குறைபாடுகளை எதிர்கொண்டு வருகிறோம். இதனால் சேவைகளை முழுமையாக நிறுத்தாமல் தற்காலிக நடவடிக்கைகள் அமல்படுத்தப்படுகிறது.
அத்தியாவசிய உணவுப் பொருட்களை மட்டும் கவனத்தில் கொண்டு எங்கள் மெனு பட்டியல் குறைக்கப்படுகிறது. முழுமையான விநியோகத்தை மீட்டெடுக்க அரசு மற்றும் விநியோகஸ்தர்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்துக்கு மன்னிப்பு கோருகிறோம் என்றும் அந்த ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
“ஆணியன் ஊத்தாப்பம், ரவா ரோஸ்ட், பஜ்ஜி, போண்டா ,புரோட்டா காலிபிளவர் ரோஸ்ட், தந்தூரி, சைனீஸ் உணவுகள் என எரிவாயு அதிகம் செலவாக கூடிய உணவு வகைகள் தயாரிப்பு நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. தோசை வகைகள், பூரி, சேவை மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது எனவும் ஹோட்டல் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.