இந்திய நேரப்படி, நாளை அதிகாலை அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்தம் முடிவடைகிறது.
இன்று பாகிஸ்தான், இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தை நடக்கவிருக்கிறது. இந்தப் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா தயாராக உள்ளது.
அமெரிக்கா சார்பாகப் பேச்சுவார்த்தையில் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ட்ரம்ப்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் கலந்துகொள்கின்றனர்.
இந்தப் பேச்சுவார்த்தைக்கு ஈரான் தயாராக இருக்கிறதா என்பதே இன்னும் தெரியவில்லை.
ஈரான் தரப்பில் இருந்து நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப், வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கலந்துகொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இன்னும் உறுதியாகவில்லை.
காலிபாஃப் பதிவு
இந்த நிலையில், முகமது பாகர் காலிபாஃப் தனது எக்ஸ் பக்கத்தில், “முற்றுகையிடுவது மூலமும், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவது மூலமும், பேச்சுவார்த்தை மேசையை ட்ரம்ப் தனது கற்பனையில் சரணடைவதற்கான மேசையாகவும், போரைத் தூண்டுவதை நியாயப்படுத்தவும் முயல்கிறார்.
அச்சுறுத்தல்களின் நிழலில் பேச்சுவார்த்தை நடத்துவதை நாங்கள் ஏற்க மாட்டோம். கடந்த இரண்டு வாரத்தில், போர்க்களத்தில் எங்களது புதிய வியூகங்களை வெளிப்படுத்த நாங்கள் தயாராகியுள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.