கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
இந்த புதிய பாதையின் திறப்பு, சென்னையின் புறநகர் ரயில் போக்குவரத்து கட்டமைப்பில் ஒரு முக்கிய மைல்கல்லாகும்.
தென்சென்னையில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை, நாளை முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து தொடங்கும் எம்ஆர்டிஎஸ் எனும் பறக்கும் ரயில் சேவை, வேளச்சேரி வரை இயக்கப்படுகிறது. சுமார் 5 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த நீட்டிப்பு திட்டம் 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பல்வேறு நிர்வாக மற்றும் கட்டுமான தாமதங்களால் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த இந்த திட்டம் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் கட்டுமான ரீதியாக நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. தண்டவாளம் அமைத்தல், மின்மயமாக்கல் மற்றும் சிக்னல் அமைப்புகள் உள்ளிட்ட முக்கிய பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றன.
அதனைத் தொடர்ந்து திட்டத்தின் செயல்திறனை பரிசோதிக்கும் வகையில் கடந்த நவம்பர் 7 மற்றும் டிசம்பர் 15 ஆகிய தேதிகளில் சரக்கு ரெயில்கள் மூலம் சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த சோதனைகள் வெற்றிகரமாக நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான தடத்தில் ரயில் சோதனை ஓட்டமும் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து பாதுகாப்பு ஆணையர் வழங்கிய வழிகாட்டுதல்களின்படி, ரயில்வே நிர்வாகம் அனைத்து பணிகளையும் முழுமையாக நிறைவு செய்துள்ளது.
சென்னை கடற்கரை – பரங்கிமலை இடையே 43 ஜோடி பறக்கும் ரயில் சேவைகள் இயக்கப்படும் என்றும் சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே 2 ஜோடி ரயில் சேவைகள் இயக்கப்படும் என்றும் பரங்கிமலை – வேளச்சேரி இடையே 3 ஜோடி ரயில் சேவைகள் இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இந்த புதிய பாதையின் திறப்பு, சென்னையின் புறநகர் ரயில் போக்குவரத்து கட்டமைப்பில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். குறிப்பாக, பரங்கிமலை ரயில் நிலையம், பறக்கும் ரயில் (MRTS), தெற்குப் புறநகர் ரயில் சேவை மற்றும் சென்னை மெட்ரோ ரயில் ஆகிய மூன்று முக்கிய போக்குவரத்து அமைப்புகளையும் இணைக்கும் ஒரு ‘ஒருங்கிணைந்த போக்குவரத்து மையமாக’ (Multimodal Integration) உருவெடுக்கும் என தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது.