Indias First Bullet Train Update: இந்தியாவின் முதல் புல்லட் ரயில் குறித்து சூப்பர் அப்டேட் வெளியாகி உள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் தினமும் பல லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். நமது நாட்டில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மட்டுமின்றி தேஜாஸ், சதாப்தி, தூரந்தோ, ராஜ்தானி, வந்தே பாரத் என அதிவேக ரயில்கள் இயக்கபட்டு வருகின்றன. இதில் மற்ற ரயில்களை விட அதிவேகமாக செல்வதாலும், பயண நேரம் குறைவதாலும் வந்தே பாரத் ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நாட்டின் முக்கிய நகரங்களுக்கு இடையே இருக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களும் அறிமுகப்படுத்தப்பட்டன. வந்தே பாரத் ரயில்கள் இந்திய ரயில்வேயில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். இப்போது, அடுத்தகட்டமாக புல்லட் ரயில் சகாப்தத்திற்கு இந்தியா தயாராகி வருகிறது.
நாட்டின் முதல் உள்நாட்டு புல்லட் ரயிலை உருவாக்கும் பணிகள் தற்போது தீவிரமாகத் தொடங்கியுள்ளன. பெங்களூருவில் உள்ள BEML நிறுவனத்தின் ‘ஆதித்யா பிளான்ட்’-இல், இந்தியாவின் முதல் உள்நாட்டு புல்லட் ரயிலான B-28-ஐ உருவாக்கும் பணிகள் தொடங்கின. ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இந்த ஆலையைத் திறந்து வைத்தார். இது இந்திய ரயில்வே வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல் ஆகும்.
இந்த புல்லட் ரயிலின் வடிவமைப்பு, தயாரிப்பு மற்றும் இயக்கம் சார்ந்த பணிகளுக்கான ஒப்பந்தத்தை BEML நிறுவனம் 2024 அக்டோபரில் பெற்றது. இந்த திட்டத்தின் கீழ், மணிக்கு 280 கி.மீ வேகத்தில் செல்லக்கூடிய இரண்டு அதிவேக ரயில்கள் தயாரிக்கப்பட உள்ளன. இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.866 கோடி ஆகும். முதல் புல்லட் ரயில் 2027 மார்ச் மாதத்திற்குள் தயாராகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து சோதனை ஓட்டங்கள் தொடங்கும்.
2027 ஆகஸ்ட் மாதத்திற்குள் இந்த புல்லட் ரயில் சேவை தொடங்கும் வாய்ப்புள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் இந்தியாவிலும் புல்லட் ரயில் பயணம் சாத்தியமாகும். மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் வழித்தடத்தின் ஒரு பகுதியாக, இந்த ரயிலை முதலில் சூரத் மற்றும் வாபி இடையே சுமார் 97 கி.மீ தூரத்திற்கு இயக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்த தடத்தில் அதிவேக ரயில் சேவையை சோதித்த பிறகு, மற்ற இடங்களுக்கும் விரிவுபடுத்த வாய்ப்புள்ளது. மணிக்கு 228 கிமீ வேகத்தில் செல்லும் புல்லட் ரயில் பயன்பாட்டுக்கு வந்தால் சென்னையில் இருந்து திருச்சி இடையிலான 332 கிமீ தூரத்தை வெறும் 2 மணி நேரத்தில் சென்றடைய முடியும்.
இந்த புல்லட் ரயிலில் முழுவதுமாக ஏசி செய்யப்பட்ட சேர் கார் கோச்கள் இருக்கும். இருக்கைகள் 360 டிகிரி சுழலும் வகையிலும், முன்னும் பின்னும் சாயும் வகையிலும் வடிவமைக்கப்படும். பயணிகளின் பொழுதுபோக்குக்காக ‘ஆன்-போர்டு இன்ஃபோடெயின்மென்ட்’ சிஸ்டமும் இதில் இடம்பெறும். இதன் மூலம், அதிவேக ரயில் தொழில்நுட்பத்தில் ஜப்பான் போன்ற நாடுகளைச் சார்ந்திருப்பதை குறைத்து, இந்தியா தற்சார்பு நிலையை நோக்கி முன்னேறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.