கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
மதுரையில் என்.டி.ஏ. கூட்டத்திற்கு மக்கள் வரவிடாமல் திமுக அரசு முயற்சித்ததாக பியூஷ் கோயல் குற்றச்சாட்டு.
“மதுரையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற என்.டி.ஏ. பிரச்சாரக் கூட்டத்திற்கு மக்களை வரவிடாமல் தடுக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு முயற்சித்தது” என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம், மண்டேலா நகரில் இன்று என்.டி.ஏ. கூட்டணியின் பிரச்சாரப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “25 ஆண்டுகளுக்கு பிறகு 2021ல் தான் திமுக முழு மெஜாரிட்டியை பெற்றது. ஆனால், திமுக சிறந்த ஆட்சியை கொடுக்கவில்லை. எம்.ஜி.ஆர்.க்கு உறுதுணையாக நின்றது மதுரை. அதன் காரணமாக திமுக அரசு, மதுரையை விரும்பவில்லை. மாஃபியா அரசியலை செய்கிறது. திமுக அரசு எது வேண்டுமானாலும் செய்யட்டும். ஆனால், இறுதியில் வாய்மையே வெல்லும். முருகனே வெல்வார்” என பேசினார்.
கூட்டம் முடிந்து பிரதமர் நரேந்திர மோடி டெல்லி புறப்பட்டுச் சென்ற நிலையில், தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல், எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலையில், என்.டி.ஏ. கூட்டணி தலைவர்கள் மதுரையில் உள்ள ஓட்டலில் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என முதலில் தகவல் வெளியான நிலையில், ஆலோசனை முடிந்து வெளியே வந்த தலைவர்கள் அதனை மறுத்துள்ளனர்.
தொடர்ந்து அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல், “மதுரையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற என்.டி.ஏ. பிரச்சாரக் கூட்டத்திற்கு மக்களை வரவிடாமல் தடுக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு முயற்சித்தது. காவல்துறை சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. சுமார் 15 கி.மீ. தூரத்திற்கு வாகன நெரிசல் ஏற்பட்டது. ஆனால், மதுரையில் நடைபெற்ற என்.டி.ஏ. கூட்டணி பிரச்சாரக் கூட்டத்திற்கு பெரிய அளவில் வந்தனர். அவர்களுக்கு எனது நன்றி” எனத் தெரிவித்தார்.
மேலும், 11ஆம் தேதி மீண்டும் பிரதமர் மோடி திருச்சிக்கு வர இருக்கிறார். அன்றைய தினம் மீண்டும் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக இதுவரை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை என்றும், பிரதமர் 11ஆம் தேதி மீண்டும் தமிழ்நாட்டிற்கு வந்துச் சென்ற பின்னரே எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை தொடங்கும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.
“பிரச்சாரத்திற்கு மக்கள் வரவிடாமல் தடுக்கப்பட்டனர்” – தமிழ்நாடு அரசு மீது அமைச்சர் பியூஷ் கோயல் குற்றச்சாட்டு