உங்கள் வீட்டில் பைப்லைன் கேஸ் (PNG) இணைப்பு இருக்கிறதா? அப்படியானால் இனி நீங்கள் LPG சிலிண்டர் பயன்படுத்த முடியாது. மத்திய அரசு கொண்டு வந்த இந்த புதிய விதிகள் குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
மேற்கு ஆசிய நாடுகளில் நடந்து வரும் போர் காரணமாக உலகம் முழுவதும் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்தியாவில் வணிக கேஸ் சிலிண்டர்கள் மட்டுமின்றி வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கும் தட்டுப்பாடு உள்ளது. இதன் காரணமாக ஹோட்டல்கள் மூடப்படும் அபாயம் உள்ளது.
இந்த நிலையில், மத்திய அரசு கேஸ் பயன்பாட்டு விதிகளில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. அதன்படி, வீடுகளில் பைப்லைன் மூலம் கேஸ் (PNG) பெறும் குடும்பங்கள், இனிமேல் LPG சிலிண்டர்களைப் பயன்படுத்த முடியாது. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் (MoPNG) இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
புதிய வழிகாட்டுதல்களின்படி, ஒரே வீட்டில் PNG மற்றும் LPG ஆகிய இரண்டு இணைப்புகளையும் வைத்திருப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. PNG இணைப்பு வைத்திருப்பவர்கள், தங்கள் LPG சிலிண்டரை உடனடியாக கேஸ் ஏஜென்சியிடம் ஒப்படைக்க வேண்டும். இனிமேல், இந்த வாடிக்கையாளர்கள் புதிய சிலிண்டரை புக் செய்ய முடியாது. மேலும், PNG பயனர்கள் எதிர்காலத்தில் புதிய LPG இணைப்பைப் பெறவும் முடியாது.
பல்வேறு நகரங்களில் PNG வசதி இருந்தும், பலர் மானிய சிலிண்டரை பதுக்குகின்றனர். இதைத் தடுத்து, தேவையுள்ளவர்களுக்கு கேஸ் கிடைக்கச் செய்வதே அரசின் நோக்கம். மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றத்தால், சர்வதேச சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டில் சிலிண்டர் தேவை 75 லட்சத்திலிருந்து 88 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்த நெருக்கடியைச் சமாளிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வீட்டு உபயோக சிலிண்டரை வர்த்தக ரீதியாகப் பயன்படுத்துபவர்களைக் கண்டுபிடிக்க, மத்திய அரசு நிர்வாகம் ‘சர்ச் ஆபரேஷன்’ தொடங்கியுள்ளது.
கேஸ் சப்ளை துண்டிக்கப்படலாம்
ஆகவே உங்களிடம் இரண்டு இணைப்புகளும் இருந்தால், அரசு நடவடிக்கை எடுக்கும் வரை காத்திருக்க வேண்டாம். உடனடியாக உங்கள் LPG இணைப்பை அருகிலுள்ள விநியோகஸ்தரிடம் ஒப்படைத்துவிடுங்கள். விதிகளை மீறினால், உங்கள் கேஸ் சப்ளை துண்டிக்கப்படலாம் அல்லது அபராதம் விதிக்கப்படலாம்.