மதுரை ரேஸ்கோர்ஸ் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்ற ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கியின் 35வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி சுவிட்சர்லாந்து அணியை கோல் மழையில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. ஆட்டத்தின் தொடக்கம் முதலே இந்திய அணி முழு ஆதிக்கமும் செலுத்தியது. முதல் காலில் இந்திய வீரர் சிங் மன்மீத் பீல்டு கோல் முறையில் இரண்டு கோல்கள் அடித்தார். மேலும், திவாரி சர்தான் நந்த் பெனால்டி கார்னர் மூலம் ஒரு கோல் சேர்த்தார்.
இரண்டாவது காலில் சிங் அர்ஷ்தீப் பீல்டு கோலில் மேலும் ஒரு கோலை பதிவு செய்தார். நான்காவது காலில் திவாரி சர்தான் நந்த் மீண்டும் பெனால்டி கார்னர் மூலம் ஒரு கோல் அடித்தார். இந்த லீக் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து அணி ஒரு கோலும் அடிக்க முடியாத நிலையில், நான்கு காலங்களின் முடிவில் இந்திய அணி பெரும் கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர் லீக் ஆட்டங்களில் ஹாட்ரிக் வெற்றி பெற்ற இந்திய அணி காலிறுதிக்கு முன்னேறி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இந்நிகழ்வில் இரண்டு கோல்கள் அடித்து சிறந்து விளையாடிய திவாரி சர்தான் நந்த் ‘ஆட்டநாயகன்’ விருதைப் பெற்றார்.
இந்தியா மதுரையில் முதல் முறையாக உலகக்கோப்பை போட்டியில் விளையாடியதால், மைதானம் ரசிகர்களால் நெரிசலுடன் காணப்பட்டது. போட்டிக்கு முன் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. போட்டி முடிவில் தோல்வியடைந்த சுவிட்சர்லாந்து வீரர்களையும் ரசிகர்கள் கைதட்டி ஊக்குவித்தனர்.