கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
மந்திரக் கற்களை வைத்து பூஜை செய்தால் பணம் இரட்டிப்பாகும் எனக் கூறி பெண்ணிடம் நகை மற்றும் பணம் பறிக்கப்பட்ட சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்தில் குற்றச் சரித்திரப் பதிவேடு குற்றவாளி உள்பட இருவர் சிக்கியது எப்படி? மந்திரக்கல்லை வைத்து பூஜை செய்தால் பணம் இரட்டிப்பாகும் எனக்கூறி பெண்ணிடம் நகை மற்றும் பணம் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தில்லாலங்கடி வேலையில் ஈடுபட்ட குற்றச் சரித்திரப் பதிவேடு குற்றவாளி உள்பட இருவர் சிக்கியது எப்படி?
புதுக்கோட்டை மாவட்டம் கொளத்தூர் அடுத்த கீரனூர் பகுதியைச் சேர்ந்தவர் சித்தி பௌசியா. 55 வயதான இந்த பெண்ணிடம் கடந்த ஆண்டு தேனி மாவட்டம் வீரபாண்டியைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார்.
மந்திர தந்திரத்தில் நம்பிக்கை கொண்ட பெண்ணிடம் நாகராஜ் தனது சித்து வேலையைக் காட்ட ஆரம்பித்துள்ளார். அவரிடம் தேனியில் உள்ள ரத்தினம் நகரில் ஆண்டவர் என்பவர் வசித்து வருவதாகவும், அவரிடம் விசித்திரமான மந்திரக் கற்கள் உள்ளதாகவும் புரூடா விட்டுள்ளார். அந்த மந்திரக் கற்களை வைத்து பூஜை செய்தால் உங்களிடம் உள்ள பணம் இரட்டிப்பாகும் என ஆசை வார்த்தைகளை அள்ளித் தெளித்துள்ளார்.
ஜீ பூம் பா கதையாக மந்திரம் சொன்னதும் முன்னால் இருக்கும் பணம் அப்படியே இரட்டிப்பாகும் என ஏகத்துக்கும் அளந்து விட்டுள்ளார். அதைக் கேட்டதும் சித்தி பௌசியா அப்படியா? என ஆச்சரியப்பட்டுள்ளார். பின்னர், கடந்த பிப்ரவரி 18ஆம் தேதியன்று ரத்தினம் நகரில் உள்ள ஆண்டவரின் இல்லத்திற்கு சித்தி பௌசியா சென்றுள்ளார். அங்கு சென்றதும் தன்னிடம் இருந்த 2 சவரன் தங்கச் செயின் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை ஆண்டவரிடம் கொடுத்துள்ளார்.
மேலும், சித்தி பௌசியாவுடன் சென்ற வெங்கடேசன் மற்றும் பெரியண்ணா ஆகியோரும் தங்களிடம் இருந்த 6 ஆயிரத்து 500 ரூபாய் மற்றும் ஆண்ட்ராய்டு செல்போன்களையும் கொடுத்துள்ளனர். இதையடுத்து, ஆண்டவர் கூறியதுபோல் மந்திரக் கற்கள் எதையும் கொடுக்காததுடன், எந்தவொரு மாயாஜாலமும் நிகழாமல் இருந்துள்ளது. அதனால், ஆண்டவர் மற்றும் நாகராஜ் கூறிய அனைத்தும் புரூடா என்பதை சித்தி பௌசியா உணர்ந்துள்ளார். தொடர்ந்து, தாங்கள் கொடுத்த நகை, பணம் மற்றும் செல்போனை திருப்பிக் கேட்டுள்ளார். அதற்கு ஆண்டவரும், நாகராஜும் தங்களது சகாக்களுடன் சேர்ந்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
அப்போதுதான் அவர்கள் ஒரு கும்பலாக மோசடி வேலையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. உடனே, பாதிக்கப்பட்ட பெண் தேனியில் உள்ள அல்லிநகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆண்டவர் மீது தேனி, அல்லிநகரம், வீரபாண்டி உள்ளிட்ட காவல் நிலையங்களில் மோசடி, கொலை மிரட்டல் என பல்வேறு குற்ற வழக்குகளில் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. குற்றச் சரித்திரப் பதிவேடு குற்றவாளியான இவர், மந்திரக் கற்கள் மாயாஜால வித்தை காட்டி பலரிடம் பணம் பறித்ததும் அம்பலமானது.
இதையடுத்து ஆண்டவர், நாகராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில், ஆண்டவர் மற்றும் நாகராஜை மட்டும் அல்லிநகரம் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். கூட்டாளிகளையும் கூண்டோடு கைது செய்ய விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மந்திரக் கற்களை வைத்து பூஜை செய்தால் பணம் இரட்டிப்பாகும் எனக் கூறி பெண்ணிடம் நகை மற்றும் பணம் பறிக்கப்பட்ட சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பணம் இரட்டிப்பாகும் எனக்கூறி மந்திரக்கல் பூஜை… நகை, பணம் பறிப்பு… கொடுத்த நகையை கேட்டால் கொலை மிரட்டல்…