ஐபிஎல் 2026, குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) vs ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) போட்டியின் சிறப்பம்சங்கள்: 10 அணிகள் களமாடும் 19-வது ஐ.பி.எல். தொடர் மார்ச் 28-ம் தேதி முதல் கோலாகலாமாக தொடங்கியது. மே 31-ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கும் இத்தொடரில், இன்று சனிக்கிழமை 2 ஆட்டங்கள் நடைபெறுகிறது. அதன்படி, இன்று பிற்பகல் 3:30 மணிக்கு டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் 8-வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும்
டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங்
தொடர்ந்து, இரவு 7:30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்து வரும், 9-வது லீக் போட்டி குஜராத் டைட்டன்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் – வைபவ் சூரியவன்ஷி ஜோடி தொடக்க வீரர்களாக களம் புகுந்தனர். அணிக்கு சிறப்பான அடித்தளத்தை போட்ட இந்த ஜோடியில் வைபவ் சூரியவன்ஷி 31 ரன்னில் அவுட் ஆனார். அவருக்குப் பின் வந்த துருவ் ஜூரல் தொடக்க வீரரான ஜெய்ஸ்வாலுடன் இணைந்து சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். இதில் அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால் 55 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த வீரர்களில் கேப்டன் ரியான் பராக் 8 ரன்னுக்கும், ஷிம்ரோன் ஹெட்மியர் 18 ரன்னுக்கும் அவுட் ஆகினர். டொனோவன் ஃபெரீரா ஒரு ரன்னில் வெளியேற, 42 பந்துகளில் 5 பவுண்டரி, 5 சிக்ஸரை பறக்க விட்டு மிரட்டிய துருவ் ஜூரல் 75 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 210 ரன்களை எடுத்தது ராஜஸ்தான் அணி. இதனால், குஜராத் அணிக்கு 211 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. குஜராத் அணி தரப்பில் ககிசோ ரபாடா 2 விக்கெட்டையும், அசோக் சர்மா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, கேப்டன் ரஷித் கான் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
211 ரன்கள் இலக்கு
தொடர்ந்து, 211 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய குஜராத் அணியில் தொடக்க வீரர்களாக சாய் சுதர்சன் – குமார் குஷாரா ஜோடி களமிறக்கினர். அணிக்கு வலுவான தொடக்கம் கொடுக்க நினைத்த இந்த ஜோடியில் குமார் 18 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த பட்லர் 26 ரன்னில் அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். ஆனாலும் தனி ஒருவனாக சிறப்பாக ஆடிய சாய் சுதர்ஷன் அரைசதம் விளாசி 73 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
இறுதியில் குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 204 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் குஜராத் டைட்டன்சை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் திரில் வெற்றிபெற்றது. சிறப்பாக பந்து வீசிய ராஜஸ்தான் வீரர் ரவி பிஷ்போய் 4 விக்கெட்டுகளையும், நந்த்ரே பர்கர், துஷார் தேஷ்பாண்டே, கேப்டன் ரியான் பராக் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினர். ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திய இம்பாக்ட் வீரரான ரவி பிஷ்னோய் ஆட்டத்தின் நாயகன் விருதை வென்று அசத்தினார்.
இரு அணிகளின் பிளேயிங் லெவன் வீரர்கள் பட்டியல்:
ராஜஸ்தான் ராயல்ஸ்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூரியவன்ஷி, துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரியான் பராக் (கேப்டன்), ஷிம்ரோன் ஹெட்மியர், டொனோவன் ஃபெரீரா, ரவீந்திர ஜடேஜா, ஜோஃப்ரா ஆர்ச்சர், நந்த்ரே பர்கர், துஷார் தேஷ்பாண்டே, சந்தீப் சர்மா.
குஜராத் டைட்டன்ஸ்: குமார் குஷாக்ரா, சாய் சுதர்சன், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), கிளென் பிலிப்ஸ், வாஷிங்டன் சுந்தர், ராகுல் தெவாடியா, ரஷித் கான் (கேப்டன்), ககிசோ ரபாடா, அசோக் சர்மா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா
ராஜஸ்தான் ராயல்ஸ் இம்பாக்ட் வீரர்கள்: ரவி பிஷ்னோய், லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், ஷுபம் துபே, பிரிஜேஷ் சர்மா, ரவி சிங்
குஜராத் டைட்டன்ஸ் இம்பாக்ட் வீரர்கள்: ஷாருக் கான், ஜேசன் ஹோல்டர், மானவ் சுதர், அனுஜ் ராவத், ஜெயந்த் யாதவ்