கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
கொடைக்கானல் பள்ளங்கி மலைக் கிராமத்தில் பற்றி எரிந்து வரும் தீ, அருகில் உள்ள வனப்பகுதிக்குள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிலவிய உறை பனியால் புல்வெளிகள், புதர்கள், செடி கொடிகள் என அனைத்தும் காய்ந்து காணப்படுகின்றது. தற்போது காலை வேளையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் ஆங்காங்கே வருவாய் நிலங்கள் மற்றும் வனப்பகுதியில் தீ பரவி எரிந்து வருகிறது.
இந்நிலையில் கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளங்கி மலைக் கிராமத்தில் உள்ள தனியார் பட்டா நிலங்களிலும், வருவாய் நிலங்களிலும் திடீரென காட்டுத்தீ பல ஏக்கர் பரப்பளவில் பரவி தொடர்ந்து எரிந்து வருகிறது.
காற்றின் வேகத்தில் தீ மளமளவென பரவி வருவதால் இந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. மேலும், அருகில் உள்ள வனப்பகுதிக்குள் தீ பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. விவசாய பகுதிகளில் தீ பரவாமல் இருக்க விவசாயிகள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இருப்பினும் வனத்துறையினர் கவனம் செலுத்தி தீயை கட்டுப்படுத்தி வனப்பகுதிக்குள் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்களிடையே வேண்டுகோள் எழுந்துள்ளது.
மார்ச் 25, 2026 10:04 PM IST