இங்கிலாந்து (ENG) vs பாகிஸ்தான் (PAK) T20 உலகக் கோப்பை போட்டியின் சிறப்பம்சங்கள்: 10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா கடந்த 7-ம் தேதி முதல் இந்தியா மற்றும் இலங்கையில் கோலாகலமாக நடந்து வருகிறது. இத்தொடரில் பங்கேற்கும் 20 அணிகள், 4 பிரிவாக பிரிக்கப்பட்டன. இதில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடித்த அணிகள், அடுத்த சுற்றான சூப்பர்-8 சுற்றுக்கு தகுதிபெற்றன. அதன்படி, 4 பிரிவுகளில் இருந்து நியூசிலாந்து, பாகிஸ்தான், இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்ரிக்கா ஆகிய 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறின.
இந்த 8 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் ஒருமுறை மோத வேண்டும். அதில் டாப் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரைஇறுதியில் மோதும். அரைஇறுதியில் வென்ற 2 அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும். இந்நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்கு பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் குரூப் 2-வில் இடம் பெற்றுள்ள இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் மோதின.
டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் – இங்கிலாந்து பவுலிங்
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக சாஹிப்சாதா ஃபர்ஹான் – சைம் அயூப் ஜோடி களமிறங்கினர். இதில் சைம் அயூப் 7 ரன்னிலும், கேப்டன் சல்மான் ஆகா 5 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் களம் புகுந்த பாபர் அசாம் 25 ரன்னில் அவுட் ஆனார். சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த தொடக்க வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் 63 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த வீரர்களில் ஃபகார் ஜமான் 25 ரன்னுக்கும், ஷதாப் கான் 23 ரன்னுக்கும் அவுட் ஆகினர்.
பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு பாகிஸ்தான் அணி 164 ரன்கள் எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய இங்கிலாந்து அணி தரப்பில் லியாம் டாசன் 3 விக்கெட்டையும், ஜேமி ஓவர்டன், ஜோஃப்ரா ஆர்ச்சர் தலா 2 விக்கெட்டையும், அடில் ரஷித் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
165 ரன்கள் இலக்கு
தொடர்ந்து, 165 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக பிலிப் சால்ட் – ஜோஸ் பட்லர் ஜோடி களமாடினர். அணிக்கு வலுவான தொடக்கம் கொடுக்க முயற்சித்த இந்த ஜோடியில், ஷஹீன் அப்ரிடி வீசிய முதல் ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட பிலிப் சால்ட் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவர் ரன் எதுவும் எடுக்காமல் டக்-அவுட் ஆகி வெளியேறவே, அவருடன் களமாடிய ஜோஸ் பட்லர் 2 ரன்னுக்கு அவுட் ஆகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
இதேபோல், அடுத்து வந்த வீரர்களில் ஜேக்கப் பெத்தேல் 8 ரன்னுக்கும், டாம் பான்டன் 2 ரன்னுக்கும், சாம் கர்ரன் 16 ரன்னுக்கும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். தனி ஒருவனாக போராடிய கேப்டன் ஹாரி புரூக் உடன் வில் ஜாக்ஸ் இணைந்து சிறிது நேரம் விக்கெட் சரிவை கட்டுப்படுத்தினார். தனது அசத்தலான பேட்டிங்கை கைவிடாத கேப்டன் ஹாரி 50 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். அணி இலக்கை எட்டிப்பிடிக்க அவர் உதவுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஹாரி 10 பவுண்டரி, 4 சிக்சருடன் 100 ரன்கள் எடுத்து போல்ட் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
களத்தில் இருந்த வில் ஜாக்ஸ் 2 சிக்ஸரை பறக்கவிட்டு 28 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த ஜேமி ஓவர்டன் டக்-அவுட் ஆனார். கடைசி ஓவரில் இங்கிலாந்து வெற்றிக்கு 3 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட சூழலில், களத்தில் இருந்த லியாம் டாசன் (1 ரன்) – ஜோஃப்ரா ஆர்ச்சர் (5 ரன்) ஜோடி அணியின் வெற்றியை உறுதி செய்தனர். 19.1 ஓவர்களில் இலக்கை எட்டிப்பிடித்த இங்கிலாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. அதிரடியாக ஆடிய கேப்டன் ஹாரி ஆட்டத்தின் நாயகன் விருதை வென்று அசத்தினார்.
இரு அணிகளின் பிளேயிங் லெவன் வீரர்கள் பட்டியல்
இங்கிலாந்து: பிலிப் சால்ட், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), ஜேக்கப் பெத்தேல், டாம் பான்டன், ஹாரி புரூக் (கேப்டன்), சாம் கர்ரன், வில் ஜாக்ஸ், லியாம் டாசன், ஜேமி ஓவர்டன், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித்
பாகிஸ்தான்: சாஹிப்சாதா ஃபர்ஹான், சைம் அயூப், சல்மான் ஆகா (கேப்டன்), பாபர் அசாம், ஃபகார் ஜமான், உஸ்மான் கான் (விக்கெட் கீப்பர்), ஷதாப் கான், முகமது நவாஸ், ஷஹீன் அப்ரிடி, சல்மான் மிர்சா, உஸ்மான் தாரிக்