கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
ஆந்திராவில் இருந்து செம்மரக்கட்டை கடத்திவந்த கார், கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில், கடத்தல்காரர்கள் வனத்துறையினரிடம் சிக்கினார்களா? நடந்தது என்ன?
ஆந்திராவில் இருந்து செம்மரக்கட்டைகள் கடத்திவந்த காரை, சினிமா படப் பாணியில் சேசிங் செய்துவந்த வனத்துறையினர், குடியாத்தம் அருகே வைத்து மடக்கிப் பிடித்துள்ளனர். கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில், கடத்தல்காரர்கள் வனத்துறையினரிடம் சிக்கினார்களா? நடந்தது என்ன?
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே ஆந்திர வனத்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தமிழக பதிவு எண் கொண்ட காரை அவர்கள் தடுத்து நிறுத்தி சோதனை செய்ய முயன்றபோது, ஆந்திர வனத்துறையினரிடமிருந்து தப்பித்து காரை அதிவேகமாக ஓட்டி வந்துள்ளனர். உடனே அலர்ட்டான ஆந்திர வனத்துறையினர் அவர்களை விடாது பாலோ செய்து, துரத்த ஆரம்பித்தனர்.
ஆந்திர எல்லையிலிருந்து தப்பித்த கார், தமிழ்நாடு எல்லைக்குள் நுழைந்த நிலையில், அம்மாநில அதிகாரிகள் உடனடியாக தமிழ்நாடு வனத்துறையினருக்குத் தகவல் அளித்து உஷார்படுத்தினர். பரதராமி சோதனைச்சாவடியில் பேரி கார்டு அமைத்து சம்பந்தப்பட்ட காரை வனத்துறையினர் தடுத்து நிறுத்த முயன்றபோது, அங்கிருந்து தப்பிய கார், வேகமாக குடியாத்தம் நோக்கி வந்துள்ளது. அதற்குள் குடியாத்தம் வந்த ஆந்திர வனத்துறையினர் தமிழக வனத்துறையினருடன் சேர்ந்து, கடத்தலில் ஈடுபட்ட காரை, சினிமா படப் பாணியில் சேசிங் செய்தனர்.
குடியாத்தம் அருகே உள்ள பாக்கம் பகுதியில் அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்துக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது காரில் இருந்த மூன்று பேர் தப்பி ஓடிய நிலையில், அவர்களில் இருவர் மட்டும் படுகாயங்களுடன் பிடிபட்டனர். பின்னர் சுமார் 500 கிலோ எடையுள்ள இரு செம்மரக்கட்டைகளையும், காரையும் பறிமுதல் செய்தனர். மேலும், படுகாயம் அடைந்த இருவரை குடியாத்தம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில், தற்போது அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செம்மரக்கட்டைகளைக் கடத்திவந்த கும்பல் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? அவர்களுக்குக் கட்டைகளை சப்ளை செய்தது யார்? உள்ளூரில் அதை வாங்க இருந்தது யார்? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது. அதில் செம்மரக்கட்டை கடத்தல் சம்பவத்தின் பின்னால் இருக்கும் முக்கிய தலைகள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.