வெங்கட கிருஷ்ண பி
10 அணிகள் களமாடும் 19-வது ஐ.பி.எல். தொடர் மார்ச் 28-ம் தேதி முதல் கோலாகலாமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மே 31-ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கும் இத்தொடரில், நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் 37-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில், நடப்பு தொடரின் தொடக்கத்தில் கணுக்கால் காயம் காரணமாக அணியில் இருந்து 2 வாரங்கள் விலகி, விளையாடாமல் இருந்து வரும் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்குவாரா? என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் தொற்றிக் கொண்டுள்ளது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும்
காயத்திற்காக மறுவாழ்வு சிகிச்சையில் இருந்த தோனி, உடற்தகுதி சோதனையை வெற்றிகரமாக முடித்த பிறகு, இந்த வாரம் ஐதராபாத் மற்றும் மும்பையில் நடைபெற்ற ஆட்டங்களில் பங்கேற்க அணியுடன் பயணம் செய்தார். இருப்பினும், அவர் இன்னும் குணமடைந்து வருவதாக சி.எஸ்.கே தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதால், அவர் போட்டிகளில் ஆடாமல் இருந்து வருகிறார். ஆனால், தோனி உடற்தகுதியுடன் இருப்பதாகவும், தற்போது நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அணியை கலைக்க விரும்பாததாலேயே தனது மீள்வருகையைத் தாமதப்படுத்துவதாகவும் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ அறிகிறது.
இன்று சனிக்கிழமை, தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங், தோனி தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகக் கூறினார். “அவர் நன்றாக முன்னேறி வருகிறார். அவர் குணமடைந்து வருகிறார், மேலும் அவரிடம் கேட்கப்படும் அனைத்தையும் செய்து வருகிறார்,” என்று ஃபிளெமிங் கூறினார். ஆனால், தோனி எப்போது களமிறங்குவார் என்பது குறித்து அவர் அதிகம் வெளிப்படுத்தவில்லை.
இருப்பினும், விவரம் அறிந்தவர்கள், 44 வயதான தோனி முழு உடற்தகுதியை மீண்டும் பெற்றுவிட்டார் என்றும், ஆனால் கடைசி இரண்டு போட்டிகளில் இளம் வீரரின் இடத்தைப் பிடித்து அணியின் கூட்டணியைக் குலைக்க அவர் தயக்கம் காட்டுகிறார் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த சீசனின் தடுமாற்றமான தொடக்கத்திற்குப் பிறகும், சி.எஸ்.கே அணி தற்போது நன்றாக மீண்டு வந்துள்ளது. மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான 103 ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியின் உத்வேகத்துடன், ஞாயிற்றுக்கிழமை மதியம் குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் களமிறங்குகிறது.
புள்ளி அட்டவணையில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் சி.எஸ்.கே, பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதிபெறும் வாய்ப்பு இன்னும் உள்ளது. அடுத்த ஏழு போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்றால், சாதகமான நெட் ரன்-ரேட் உதவியுடன் முதல் நான்கு இடங்களுக்குள் முடிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு உள்ளது.
இந்த முக்கியமான காலகட்டத்தில், அணியின் பல்வேறு அம்சங்களும் கச்சிதமாகப் பொருந்திவரும் வேளையில், அணியின் தற்போதைய கட்டமைப்பை (combination) மாற்றியமைக்க வேண்டாம் என்று தோனி அணி நிர்வாகத்திடம் கூறியதாகத் தெரிகிறது. குறிப்பாக, மும்பை இந்தியன்சுக்கு எதிரான போட்டிக்கு முந்தைய நாள் முழுமையான பயிற்சியில் ஈடுபட்டிருந்ததால், வான்கடே மைதானத்தில் தோனி களமிறங்குவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், இந்தத் தொடர் முழுவதும் வழக்கமாக நடந்துவருவது போலவே, அவர் அந்தப் போட்டியில் களமிறங்கவில்லை; அவருக்குப் பதிலாகக் கார்த்திக் சர்மா மிடில் ஆடரில் இடம்பிடித்தார்.
அந்தப் போட்டியின்போது, ​​தோனியின் உடல்நிலை குறித்த தகவலை சி.எஸ்.கே-வின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி பகிர்ந்துகொண்டார். அப்போது அவர், “தோனியின் முன்னேற்றம் மிகவும் சிறப்பாக உள்ளது. முடிந்தவரை விரைவாகக் களத்திற்குத் திரும்ப வேண்டும் என்பதில் அவர் மிகுந்த முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். தோனி களத்தில் விளையாடுவதைக் காண ரசிகர்கள் அனைவரும் விரும்புவார்கள் என்பது எனக்குத் தெரியும். வரும் சில போட்டிகளிலாவது அவர் விளையாடுவார் என்று நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்.
நாங்களும் அவர் கூடிய விரைவில் அணிக்குத் திரும்ப வேண்டும் என்றே விரும்புகிறோம். ஆனால், வெளிப்படையாகச் சொல்லப்போனால், அவர் தனது முழுத் திறனையும் வெளிப்படுத்தும் வகையில், கிட்டத்தட்ட 100 சதவீதம் உடற்தகுதியுடன் இருக்க வேண்டியது அவசியம். வலைப்பயிற்சியில் அவர் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார்; வலைப்பயிற்சியில் பார்க்கும்போது அவர் நல்ல நிலையில் இருப்பது தெரிகிறது. இப்போது அவருக்குத் தேவைப்படுவது, விக்கெட்டுகளுக்கு இடையே வேகமாக ஓடி ரன் எடுக்கும் திறனை முழுமையாக மீட்டெடுப்பது மட்டுமே,” என்று மைக் ஹஸ்ஸி கூறினார்.
14.2 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட பேட்ஸ்மேனான கார்த்திக், இன்னும் தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்தாத நிலையில், குஜராத்துக்கு எதிரான போட்டியில் தோனியை சி.எஸ்.கே அணியில் சேர்க்க வாய்ப்புள்ளது. ஆனால், அந்த முடிவு முற்றிலும் தோனியின் கையில்தான் உள்ளது என ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ அறிகிறது. சனிக்கிழமையன்று, தோனி எந்தவித சிரமமும் இன்றி சிறிது தூரம் ஓடினார். காயத்திலிருந்து மீண்டு வரும் காலகட்டத்தில் த்ரோடவுன்களை எடுப்பதை நிறுத்திக்கொண்ட தோனி, மும்பையில் வலைப்பயிற்சியில் பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டதுடன், விக்கெட் கீப்பிங் பயிற்சிகளிலும் ஈடுபட்டார்.
சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பராக தன்னை மாற்றிக்கொண்ட விதமே, தோனி அணி கூட்டணியை மாற்றத் தயங்குவதற்குக் காரணம். தோனி விக்கெட் கீப்பிங் செய்வாரா என்று கேட்டபோது, ​​”அவர் நிச்சயமாக விக்கெட் கீப்பராக இருப்பார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்,” என்று மைக் ஹஸ்ஸி கூறினார். “மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், அவருக்குக் கெண்டைக்கால் தசையில் காயம் ஏற்பட்டுள்ளது. அதனால், ஓடும்போதும், ஆட்டத்தின் பிற்பகுதியில் அவர் களமிறங்கி ஒன்று மற்றும் 2 ரன்களை வேகமாக எடுக்க வேண்டியிருக்கும்போதும், அதைத் தாங்கும் அளவுக்கு அவரது கெண்டைக்கால் தசை வலுவாக இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். ஆனால் நிச்சயமாக, திறமையைப் பொறுத்தவரை, ஒரு கீப்பராக அவரால் என்ன செய்ய முடியும் என்பது நமக்குத் தெரியும், மேலும் அவர் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். எனவே, இது கெண்டைக்கால் தசைக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதைப் பற்றியது,” என்று அவர் கூறினார்.