Meyaadha Maan: ‘மேயாத மான்’ திரைப்படத்தில், ஹீரோ மற்றும் ஹீரோயினாக நடிக்க இருந்த நட்சத்திரங்கள் பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில், காதல், நட்பு கலந்த கலவையாக வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் தான் “மேயாத மான்”. 2017 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் எளிமையான கதைக்களத்தில், மிக குறைவான பட்ஜெட்டில் வெளியாகி இளம் ரசிகர்களின் மனதை கவர்ந்தது. ரத்னா குமார் இயக்குனராக அறிமுகமான இந்த படத்தை, கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
வைபவ் ஹீரோவாக நடித்திருந்த நிலையில், பிரியா பவானி சங்கர் ஹீரோயினாக நடித்திருந்தார். மேலும் விவேக் பிரசன்னா, இந்துஜா ரவிச்சந்திரன், அருண் பிரசாத் மற்றும் அம்ருதா சீனிவாசன் போன்றோர் துணை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்த இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது. விது அய்யண்ணா ஒளிப்பதிவு செய்ய, ஷஃபிக் முஹம்மது அலி படத்தொகுப்பு செய்திருந்தார்.
இந்த திரைப்படம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகி, வெற்றி பெற்றது. குறிப்பாக இந்துஜா மற்றும் விவேக்கின் நடிப்பு பாராட்டை பெற்றதோடு, பிரியா பவானி ஷங்கருக்கு சிறந்த அறிமுக படமாகவும் அமைந்தது. இப்படம் சில விருதுகளையும் வென்று குறித்து குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான்… இயக்குனர் ரத்னகுமார் ‘மேயாத மான்’ திரைப்படத்தில் நடிக்க இருந்த ஹீரோ ஹீரோயின் குறித்த தகவலை சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
‘மேயாத மான்’ திரைப்படத்தில் முதலில் நடிகர் ஜெய் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் தான் முதலில் கதாநாயகன் மற்றும் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார். இருவருக்குமே கதை மிகவும் பிடித்த போதிலும், எதிர்பாராத விதமாக படம் துவங்க இருந்த போது, பண மதிப்பிழப்பை அரசு அறிவித்துள்ளது. எனவே இந்த படம் நிறுத்தப்பட்டதாம்.
பிரச்சனை சீரான பின்னர் அவர்கள் இருவரின் கால்ஷீட் கிடைப்பதில் சிக்கல் ஏற்படவே, வைபவ் மற்றும் பிரியா பவானி ஷங்கர் ஆகியோரை வைத்து மேயாத மான் படம் எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.