கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
சேலத்தில் பிரச்சாரக் கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் திடீரென மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று சேலத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு நிலையில், மயக்கம் அடைந்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனும் கட்சியின் தலைவருமான அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு, இருவரும் தனித்தனியே செயல்பட்டுவருகின்றனர். இருவரும் தங்களுக்குத்தான் கட்சி சொந்தம் என கொண்டாடிவருகின்றனர்.
இந்நிலையில் நடைபெற இருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026ல் அன்புமணி தலைமையிலான பாமக, அதிமுக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணியில் இணைந்து போட்டியிடுகிறது. பாமக நிறுவனரான ராமதாஸ், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவின் கட்சியான அ.இ.பு.த.ம.மு.க.வுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கிறார்.
அதன்படி தனது சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்திருந்த ராமதாஸ், இன்று முதல் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். அதன்படி, ராமதாஸின் தீவிர ஆதரவாளரான அருளுக்கு ஆதரவு திரட்டி சேலம் மாவட்டம், பள்ளபட்டி பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தை ராமதாஸ் மேற்கொண்டார்.
அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பேசிய ராமதாஸ், அருளுக்கு ஆதரவு திரட்டி வாக்கு சேகரித்தார். இதனைத் தொடர்ந்து அவர் அடுத்த பிரச்சாரத்திற்கு செல்வதற்காக பிரச்சார மேடையில் இருந்து கீழே இறங்கினார்.
அப்போது திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டு மயங்கினார். அப்போது அவரது பின் இருந்தே அவரது ஆதரவாளர்களும், தொண்டர்களும் அவரை தாங்கி பிடித்தனர். இதனைத் தொடர்ந்து உடனடியாக அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அவருடன் அவரது மகள் ஸ்ரீகாந்தி, வேட்பாளர் அருள் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். தற்போது ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.