கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குவதாகவும், மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்ப்பதாகவும் விமர்சித்திருந்தார்.
நெல் சாகுபடிக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டாம் என்று தமிழகத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியிருப்பது திசை திருப்பும் செயல் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியிருந்த நிலையில் அவருக்கு முதல்வர் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
நிர்மலா சீதாராமன் தனது எக்ஸ் தளத்தில், பருப்பு, எண்ணெய் வித்துகள், நெல் தொடர்பாக மாநில அரசுகள் வழங்கும் ஊக்கத்தொகை கொள்கைகளை தேசிய முன்னுரிமைகளுடன் ஒருங்கிணைக்க வேண்டும் என எழுதப்பட்ட கடிதம், தமிழகத்திற்கு மட்டுமல்ல, அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் அனுப்பப்பட்ட தகவல் எனத் தெரிவித்துள்ளார். இது, உள்நாட்டுத் தேவை அதிகமாக உள்ள பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து, அதிக லாபத்தைப் பெற வழிவகை செய்யும் என்றும் கூறியுள்ளார்.
குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (MSP) மேல் ஊக்கத்தொகை அல்லது போனஸ் அறிவிப்பது என்பது மாநில அரசுகளின் தனிப்பட்ட அதிகாரத்திற்கு உட்பட்டது என்றும் அந்த அதிகாரத்தை யாரும் பறிக்கவில்லை என்றும் கூறியுள்ள நிர்மலா சீதாராமன், முதலமைச்சர் ஸ்டாலின், தேச நலனில் அக்கறை கொண்டு ஆக்கப்பூர்வமாகச் செயல்படுவதற்குப் பதிலாக, குறுகிய சுயநல அரசியல் ஆதாயத்திற்காகத் திட்டமிட்டுத் திசைதிருப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டியிருந்தார். தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குவதாகவும், மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்ப்பதாகவும் விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில் நிர்மலா சீதாராமனின் இந்தப் பதிவுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளிக்கும் விதமாக எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “நெல்லுக்குத் தமிழ்நாடு அரசு வழங்கும் ஊக்கத்தொகையால் விளைச்சல் பெருகிக் கொண்டே போகிறது. எனவே, இந்த ஊக்கத்தொகையை நிறுத்த வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளருக்குத் தங்களின் அமைச்சகம் அனுப்பிய கடிதத்தில் மிகத் தெளிவாகவே உள்ளது. கடிதத்தில் இல்லாத எதையும் நான் பேசவில்லை. அப்படி, பேசவேண்டிய அவசியமும் எனக்கு இல்லை.
எங்களுக்கு அனுப்பிய கடிதத்தில், தற்போது மாநில அரசால் தரப்படும் ஊக்கத்தொகையை மறுபரிசீலனை செய்யுமாறும், நெல்லுக்கு இத்தகைய ஊக்கத்தொகை வழங்குவதை நிறுத்துவது தொடர்பாகப் பரிசீலனை செய்யவும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். தங்களுடைய இந்தப் பதிவில், “குறைந்தபட்ச ஆதார விலையைத் தாண்டி ஊக்கத்தொகை வழங்குவது மாநில அரசின் முடிவு எனவும், அதனை யாரும் பறிக்கவில்லை” என்றும் கூறியிருக்கிறீர்கள். தங்களது கூற்று உண்மைதானென்றால், அந்தக் கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தாங்கள் தயாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை (மெட்ராஸ்), சென்னை, தமிழ்நாடு