எனவே, இந்திரா காந்தி தலைமையிலான அரசு 42வது அரசியலமைப்பு சட்ட திருத்தத்தை கொண்டு வந்தது. இதன் கீழ், 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை 2001 வரை மாற்றக் கூடாது என்ற திருத்தத்தை அரசியலமைப்பில் கொண்டு வந்தது. வாஜ்பாய் அரசு தென்மாநிலங்களில் நலன் கருதி இந்த காலக்கெடுவை 2026 வரை (84வது சட்டதிருத்தம்) நீட்டித்தது.
எனவே, மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு இருக்க வேண்டும் என இந்திய அரசியலமைப்பு வலியுறுத்தினாலும், மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தென்மாநிலங்களின் உரிமைகளை நிலைநாட்டும் வகையில் இந்திரா காந்தி அரசும், வாஜ்பாய் அரசும் அரசியலமைப்பில் சில திருத்தங்களை மேற்கொண்டு தொகுதி மறுசீரமைப்பை தடுத்து நிறுத்தினர். அதாவது, 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் உருவாக்கப்பட்ட 543 தொகுதிகளே இன்றும் உள்ளன. கடந்த அரை நூற்றாண்டிற்கும் மேலாக இந்தியாவின் மக்கள் தொகை பல மடங்கு அதிகரித்தும், மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை மட்டும் மாறாமல் 543 என்ற அளவிலேயே இன்றுவரை நீடிக்கிறது
84-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் விதித்த தடையானது இந்தாண்டுடன் முடிவுக்கு வருகிறது. இந்தச் சூழலில், அடுத்தகட்ட தொகுதி மறுசீரமைப்பிற்கான அடித்தளத்தை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தற்போதே அமைக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, பெண்கள் இடஒதுக்கீடு சட்டத்தின் மூலமாக தொகுதி மறுசீரமைப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாற்றப்பட்டுள்ளது. இதற்காக, தொகுதிகளை உயர்த்துவதற்கான 131வது அரசியலமைப்புத் திருத்த மசோதா, தொகுதி மறுநிர்ணய ஆணையம் (Delimitation Commission) அமைப்பதற்கான மசோதா மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான பிரத்யேக மறுசீரமைப்பு மசோதா ஆகியவற்றை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இதில், 131வது அரசியல் சட்டதிருத்த மசோதா 3 முக்கிய மாற்றங்களை கொண்டு வருகிறது. 550 ஆக மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்தியுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் மக்களவையில் பகிர்ந்து அளிக்கப்படும் எண்ணிக்கை அந்தந்த மாநிலத்தின் மக்கள் தொகையின் ஏற்ப இருக்க வேண்டும் என்று விதித்துள்ளது. எனவே, மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் (latest census figures) தொகுதி மறுசீரமைப்பு திட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக, தென் மாநிலங்களின் உரிமையை பாதுக்காக்கும் பிரிவு அரசியலமைப்பில் இருந்தே நீக்கப்படுகிறது. (அல்லது) தென் மாநிலங்களுக்கு நியாயமான தொகுதி மறுசீரமைப்பை கொடுக்கும் எந்தவொரு பாதுகாப்பும் மசோதாவில் இடம்பெறவில்லை.
இருப்பினும், எந்தாண்டின் மக்கள் தொகை அடிப்படையில் தொகுத்து மறுவரை செய்யலாம் என்று முடிவெடுக்கும் அதிகாரத்தை நாடாளுமன்றத்திற்கு கொடுத்துள்ளது. எனவே, நாடாளுமன்றம் Delimitation மசோதா மூலம் அதனை நிர்ணயித்துக் கொள்ளலாம்.
ஒருவேளை, 2026 மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை பிரித்தால் தமிழ்நாட்டின் எண்ணிக்கை 39ல் இருந்து 31 என குறையும். கேரளாவின் எண்ணிக்கை 20ல் இருந்து 14 ஆக குறையும். பாஜக செல்வாக்கு அதிகம் இருக்கும் வட மாநிலங்களான உத்திர பிரதேசம், பீகார், ராஜஸ்தான் குஜராத் போன்ற மாநிலங்களில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை கிட்டதட்ட இரு மடங்காக உயரும்.
இந்நிலையில் தான் நேற்று மக்களவையில் முக்கிய விளக்கத்ததை உள்துறை அமைச்சர் அமித்ஷா அளித்தனர். அமித் ஷா தனது உரையில், “அனைத்து மாநிலங்களுக்கும் 50% இடங்கள் உயர்த்தப்படும் என்றும் மாநிலங்களுக்கு இடையே எந்த விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை உள்ளனவோ அதே விகிதத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்படும் என்றும் தெரிவித்தார்.
இதன் உள்ளார்ந்த அர்த்தம் என்னவென்றால் வெறுமனே மக்கள் தொகையை மட்டும் கணக்கில் கொள்ளாமல், தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவ உரிமைகளை நிலைநாட்டும் வகையில் தொகுதி மறுசீரமைப்பு அமையவுள்ளது என்பதாகும். இருப்பினும், இன்று தாக்கல் செய்த அரசியலமைப்பு சட்டதிருத்த மசோதாவில் இதனை செயல்படுத்துவதற்கான சட்டப்பிரிவுகள் இடம்பெறவில்லை.
அமித் ஷா விளக்கத்தின் சாதகங்கள்: மக்கள் தொகை கணக்கெடுப்பு மட்டும் கணக்கில் கொண்டால் தமிழ்நாட்டின் எண்ணிக்கை 39ல் இருந்து 31 என குறையும். இருப்பினும், விகிதாச்சார அடிபப்டையில் தற்போது விளக்கத்தால் தமிழ்நாட்டின் எண்ணிக்கை 39ல் இருந்து 59 ஆக அதிகரிக்கும். ஒட்டுமொத்த தென்மாநிலங்களும் பயனடையும், பலம் கூடும்.
இந்திரா காந்தி,வாஜ்பாய் அரசுகள் கொண்டு வந்த பாதுகாப்புகள் (Freeze) அரசியலமைப்புச் சட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தன. ஆனால், அத்தகைய பாதுகாப்பு இன்று கொண்டு வந்த அரசியலமைப்பு மசோதாவில் இடம்பெறவில்லை.
எனவே, இந்த உறுதிமொழியை 131-வது மசோதாவிலேயே ஒரு சட்டப்பிரிவாகச் சேர்த்தால் மட்டுமே அதற்கு நிரந்தரத் தன்மை கிடைக்கும். ஏனெனில், அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்த மூன்றில் இரண்டு பங்கு (2/3) நாடாளுமன்ற ஆதரவும், பாதிக்கும் மேற்பட்ட மாநிலங்களின் ஒப்புதலும் தேவை. அத்தகைய கடினமான பாதுகாப்பு இருந்தால் மட்டுமே எதிர்கால அரசுகள் தென்மாநிலங்களின் உரிமையில் கைவைக்க முடியாது
அதேசமயம், இந்த உத்திரவாதத்தை சாதாரண சட்டத்தின் (தொகுதி மறுநிர்ணய ஆணையம் மசோதா) மூலம் நிறைவேற்ற மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. அரசியலமைப்புக்குள் கொண்டு வராமல் சாதாரண சட்டத்தை வருங்காலத்தில் வரும் எந்தவொரு அரசும் சாதாரண பெரும்பான்மையைப் பயன்படுத்தி தென்மாநிலங்களுக்கு கொடுத்த பாதுகாப்பினை ரத்து செய்ய முடியும். எனவே, மத்திய அரசின் வாக்குறுதிகள் அனைத்தும் அரசியலமைப்பு சட்டப்பிரிவில் சேர்க்காதவரை தென்மாநிலங்களின் கவலைகள் தீராது.