தேர்வு எழுதும் மாணவர்களுக்கான பிரத்யேக நட்சத்திர பலன்கள்! – Kumudam


மாணவர்கள் கல்வியில் சிறக்க மகத்தான பரிகாரங்கள்!

– யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

10  மற்றும் 12-ம் வகுப்பு மாணவ செல்வங்கள் பொதுத்தேர்வுகளை எழுத தொடங்கி  இருக்கிறார். அதே போன்று 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலும் மாணவ செல்வங்கள் இறுதித்தேர்வை எழுத போகிறார்கள். தேர்வுகளை எழுத இருக்கும் மாணவசெல்வங்களுக்கான நட்சத்திர பலன்களை பார்ப்போம்.

திருவாதிரை

இயல்பாகவே எதையும் எளிதில் புரிந்துகொள்ளும் ஆற்றல் மிக்கவர்கள் நீங்கள். ராகு தசையில் பிறந்த உங்களின் பள்ளிப்பருவம், குரு தசை வரை தொடரும். கற்றவை எதையும் எளிதாக நினைவில் வைத்துக்கொள்வதும், சரியான சமயத்தில் அதனை உபயோகப்படுத்துவதும் உங்கள் குணம்.
வெற்றி எப்போதும் உங்கள் பக்கத்திலேயே இருக்கும் என்றாலும், வீண் பிடிவாதத்தாலும், அநாவசிய கோபத்தாலும் நீங்கள் அதை இழப்பீர்கள். விட்டுக் கொடுத்துப் போவதும், சினம் தவிர்ப்பதும் சீரான நன்மையைத் தரும். விருப்பம் போல் வெளிநாட்டுக் கல்வி வாய்ப்பு வாசல் தேடி வரும். நட்பு வட்டாரத்தில் உங்களுக்கு நற்பெயர் இருக்கும். அதேசமயம் முகத்திற்கு முன் புகழ்ந்து புறம் இகழும் நட்புகளை அடையாளம் கண்டு விலக்குவது நல்லது. உடல்நல பாதிப்பு அடிக்கடி ஏற்படக்கூடியவர்கள் நீங்கள். எனவே, தொற்றுநோய் பாதிப்பு, வயிற்று உபாதைகள், அலர்ஜித் தொல்லைகளில் உடனடி சிகிச்சை எடுப்பது நல்லது. இரவு நேரத்தைவிட அதிகாலையே நீங்கள் படித்திட ஏற்றது.

செவ்வாய்க்கிழமைகளில் காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்ட தெய்வத்தின் முன் 5 அகல் தீபம் ஏற்றி வழிபடுங்கள். முடிந்தால் மாலையில் ராகுவை வழிபடுவதும் நல்லது. புதிய முயற்சிகளுக்கு முன் பக்கத்துக் கோயிலில் துர்க்கையைத் துதித்து வாருங்கள். மூன்று வருடத்திற்கு ஒருமுறை கதிராமங்கலம் சென்று வனதுர்க்கையை வழிபடுங்கள். மாணவப் பருவம் நிறைந்ததும், திருக்கொள்ளிக்காடு தலம் சென்று பொங்கு சனிபகவானை வழிபடுங்கள். உங்கள் வாழ்வில் வளம் பொங்கும்.

புனர்பூசம்

தன்னம்பிக்கையும் தளராத முயற்சிகளும் உள்ளவர் நீங்கள். குருதசையில் பிறந்த உங்களின் மாணவப் பருவம், சனிதசை வரை தொடரும். எதையும் உடனுக்குடன் புரிந்துகொள்ளும் ஆற்றல் உள்ளவர் நீங்கள். சீராகவும் சிறப்பாகவும் செய்யக்கூடிய நீங்கள், திட்டமிட்டும் நேரம் தவறாமலும் செயல்படுவதையும் பழக்கப்படுத்திக் கொண்டால் உங்கள் வெற்றிகள் உறுதியாகும்.

ஆராய்ச்சி மனப்பாங்கு உடைய நீங்கள் குறுகிய வட்டத்திற்குள் இருக்கவே ஆசைப்படுவதும் உங்கள் வெற்றிக்குத் தடையாக இருக்கும். புதிது புதிதாகப் பல விஷயங்களைத் தெரிந்துகொள்வதும், கிணற்றுத் தவளையாக இருப்பதைத் தவிர்ப்பதும் அவசியம். அயல்நாட்டுக் கல்வி வாய்ப்பு வரும்போது தவிர்க்காமல் ஏற்பது நல்லது.

அலர்ஜி, தொற்று நோய், உஷ்ண பாதிப்புகள், அஜீரணம், சளித்தொல்லை பாதிப்புகளில் உடனடி சிகிச்சை அவசியம். தினமும் குறிப்பிட்ட நேரத்தில் படிப்பதை வழக்கமாக்கிக் கொள்வது நல்லது.

வியாழக்கிழமைகளில் காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்ட தெய்வத்தின் முன் 5 அகல் தீபம் ஏற்றி வழிபடுங்கள். புதிய முயற்சிகளின்போது, பக்கத்திலுள்ள மகானின் பிருந்தாவனம் சென்று வாருங்கள். 3 வருடத்திற்கு ஒருமுறை மந்திராலயம் சென்று ராகவேந்திரரை தரிசியுங்கள். கல்விப்பருவம் முடிந்ததும், மதுரை சென்று மீனாட்சி, சுந்தரேஸ்வரரை அர்ச்சித்து வழிபட்டு வாருங்கள். உங்கள் வாழ்க்கை பசுமையாகும்.

பூசம்

திட்டமிட்டுச் செயல்பட்டு வெற்றிகளைப் பெறக்கூடியவர் நீங்கள். சனிதசையில் பிறந்த உங்களின் மாணவப் பருவம், புதன்தசை வரை தொடரும். எல்லா செயல்களிலும் திட்டமிட்டுச் செயல்படுவதும், குறிப்பிட்ட நேரத்தில் செய்வதும் உங்கள் குணம். அதேசமயம், உங்கள் தீர்மானம் மட்டுமே சரியானது என்ற விடாப்பிடியான குணம் தவிர்ப்பது அவசியம். இந்த நட்சத்திரக் குழந்தைகளை பெற்றோர் பிறருடன் ஒப்பிட்டுக் குறைசொல்லிப் பேசாமலும், அதிகாரம் இல்லாமல் அன்பு காட்டியும் வளர்த்தால் இவர்கள், மாணவப் பருவத்தில் பல சாதனைகள் புரிவார்கள்.

எதிலும் நீங்களே முன் நிற்கவேண்டும் என்ற மனோபாவம் உள்ளவர் நீங்கள். நட்பிலும்கூட நீங்கள்தான் மதிக்கப்படவேண்டும் என நினைப்பீர்கள். முயற்சிகளில் தளராமல் இருந்தால், உங்களுக்கு வெளிநாட்டுக் கல்வி வாய்ப்பு எளிதாகக் கைகூடும். கால்சியம் பற்றாக்குறையால் எலும்புத் தேய்மானம், பற்களில் பாதிப்பு; காது, மூக்கு, தொண்டை உபாதைகள் வரலாம். உடன் மருத்துவம் உத்தமம்.

செவ்வாய்க்கிழமைகளில் காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்ட தெய்வத்தின் முன் 5 அகல்தீபம் ஏற்றி வழிபடுங்கள். புதிய முயற்சிகளைத் தொடங்கும் முன், பக்கத்திலுள்ள துர்க்கை கோயிலுக்குப் போய் வாருங்கள். வருடத்திற்கு ஒருமுறை அறுபடை வீடுகளுள் ஏதாவது ஒரு தலத்திற்குச் சென்று வணங்குங்கள். பள்ளிப்பருவம் முடிந்ததும், பட்டீஸ்வரம் சென்று துர்க்கையை தூய மனதோடு துதித்து வாருங்கள். உங்கள் வாழ்வு மணக்கும்.

ஆயில்யம்

பொறுமையாகச் செயல்பட்டு பெருமை பெறக்கூடியவர் நீங்கள். புதன் தசையில் பிறந்த உங்களின் மாணவப் பருவம், கேது தசை வரை தொடரும். சிலருக்கு சுக்ர தசையிலும் தொடரலாம். அறிவாற்றல் இயற்கையாகவே அதிகம் இருக்கும் உங்களுக்கு அதுவே சில சமயங்களில் அகந்தையாக மாறி வெற்றிக்குத் தடையாகிவிடும். தற்பெருமையும் தலைக்கனமும் தவிர்ப்பது நல்லது. அயல்நாட்டுக் கல்வியில் ஆர்வம் உள்ளவர் நீங்கள். அதற்கு உரிய முயற்சிகளில் ஈடுபடும்போது, மூன்றாம் நபரை நம்பிச் செயல்படுவது எதிர்பாராத பிரச்னைக்கு வழிவகுத்துவிடலாம். எனவே, உரிய நபர்களிடம் மட்டுமே ஆலோசனை கேட்பதும், பெற்றோர் உதவியை மட்டுமே நாடுவதும் நல்லது.

சிறுவயது முதலே குறிப்பிட்ட நேரத்தில் படிப்பதையும், ஒரு முறைக்கு இருமுறை எழுதிப் பார்ப்பதையும் வழக்கமாக்கிக் கொள்வது நல்லது. முதுகுத்தண்டுவடம் வலி, கழுத்து எலும்புத் தேய்மானம், கீழே விழுந்து அடிபடுதல் போன்ற பிரச்னைகள் வரலாம். உடன் சிகிச்சை அவசியம்.

வியாழக்கிழமைகளில் காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்ட தெய்வத்தின் முன் 5 அகல் தீபம் ஏற்றி வழிபடுங்கள். புதிய முயற்சிகளுக்கு முன் தட்சிணாமூர்த்தியை வழிபடுங்கள். 3 ஆண்டுக்கு ஒருமுறை ஆலங்குடி திருத்தலம் சென்று தட்சிணாமூர்த்தியையும், குருபகவானையும் கும்பிட்டு வாருங்கள். மாணவப்பருவம் முடிந்ததும், திருப்பதி சென்று கோவிந்தராஜப்பெருமாள், பத்மாவதித் தாயார், வேங்கடவனை தரிசித்து வாருங்கள். உங்கள் வாழ்க்கை ஒளிமயமாகும்.

மகம்

எதையும் சட்டெனப் புரிந்துகொள்ளும் ஆற்றல்மிக்கவர் நீங்கள். கேது தசையில் பிறந்த உங்களின் மாணவப் பருவம், சுக்ர தசை வரை நீடிக்கும். சிலருக்கு சூரிய தசையிலும் தொடரலாம். சீராகவும் சிறப்பாகவும் எதையும் செய்திடும் ஆற்றல் உங்களுக்கு உண்டு. அதேசமயம் சோம்பல்தனத்தால் உங்கள் வெற்றிகளுக்கு நீங்களே தடையாக இருப்பீர்கள். எனவே சோம்பலை சோம்பல்படாமல் விரட்டினால் பெரும் சாதனைகள் செய்யலாம். அயல்நாட்டுக் கல்வி, கல்விக்கடன் தொடர்பான உங்களின் முயற்சிகள் நிச்சயம் ஈடேறும். புதிய முயற்சிகளைத் தொடங்கும்முன் பக்கத்துக் கோயிலில் உள்ள அனுமனை வழிபடுவது சிறப்பான பலன் தரும்.

சிறுவயதிலேயே தியானம், யோகா என ஏதாவது ஒரு பயிற்சியிலாவது ஈடுபடுவது உங்கள் மனம் ஒன்றிய செயல்பாட்டுக்கு உதவும். தினமும் சிறிது நேரமாவது தெய்வீக சிந்தனையோடு இருப்பது நல்லது. வயிறு, ஜீரண உபாதைகளும் தொண்டைப் பிரச்னைகளும் உங்களைத் தாக்கலாம். அலட்சியமில்லாத சிகிச்சை அவசியம்.
வெள்ளிக்கிழமைகளில் காலை 6.15 முதல் 6.45க்குள் 5 அகல்தீபங்களை ஏற்றி இஷ்ட தெய்வத்தை வழிபடுங்கள். 

ராகவேந்திர மகானை வழிபடுவதும் நல்லது. 3 வருடத்துக்கு ஒருமுறை பிள்ளையார்பட்டி சென்று வருவது சிறப்பான நற்பலன் தரும். மாணவப் பருவத்தின் முடிவில் திருப்பதி சென்று வருவது, குறிப்பாக பத்மாவதி தாயாரைத் தரிசித்து வருவது நல்லது. எப்போதும் மகாலட்சுமியை வழிபட்டு வந்தால் வாழ்க்கை சீராக சிறப்பாக அமையும்.

தொடரும்.. 



Thank You

  • Related Posts

    குரோதி தமிழ் புத்தாண்டு ராசி பலன்: நிம்மதி.. சிம்ம ராசிக்காரர்களுக்கு மனசெல்லாம் மத்தாப்பு – Kumudam

    நிதானமாகச் செயல்பட்டா, நிம்மதி நிலைக்கும் ஆண்டுங்க. பணியிடத்துல உங்க திறமைக்கு ஏற்ப புதிய பொறுப்புகளை ஏற்கவேண்டி வரலாம்க. சக ஊழியர்கள் ஆதரவு சந்தோஷம் தரும்க. அதேசமயம் மறைமுக எதிரிகள் மேலிடத்துக்கும் உங்களுக்கும் இடையில சிண்டுமுடியலாம், கவனமா இருங்க. கோப்புகள் எதிலும் கையெழுத்திடும்…

    குரோதி தமிழ் புத்தாண்டு ராசி பலன்: கன்னி ராசிக்காரர்களுக்கு கொட்டப்போகும் பண மழை – Kumudam

    கன்னி: அலுவலகத்துல அல்லவை நீங்கி நல்லவை அதிகரிக்கத் தொடங்கும்க. எட்டாக் கனியாக இருந்த பதவி, ஊதிய உயர்வுகள் கைகூடி வரும்க. மேலிடத்தால் உங்க திறமை உணரப்பட்டு பெருமை சேரும்க. உடன் பணிபுரியும் யாரையும் உதாசீனப்படுத்த வேண்டாம்க. தொடர் உழைப்புனால களைப்பு ஏற்பட்டாலும்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    அதிகரித்த வாக்குப் பதிவு சதவிகிதம்! ”மே 4 தமிழ்நாடு வெல்லும்” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

    • By admin
    • April 23, 2026
    • 7 views
    அதிகரித்த வாக்குப் பதிவு சதவிகிதம்! ”மே 4 தமிழ்நாடு வெல்லும்” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

    ஆயுஷ் மாத்ரேவுக்கு பதிலா இந்த 2 பேர்ல ஒருத்தரை செலக்ட் பண்ணலாம்

    • By admin
    • April 23, 2026
    • 8 views
    ஆயுஷ் மாத்ரேவுக்கு பதிலா இந்த 2 பேர்ல ஒருத்தரை செலக்ட் பண்ணலாம்

    சட்டமன்ற தேர்தல் 3 மணி நிலவரம் :   70  சதவிகிதம் வாக்குப்பதிவு, 4 கோடி பேர் வாக்களிப்பு   – Kumudam

    • By admin
    • April 23, 2026
    • 12 views
    சட்டமன்ற தேர்தல் 3 மணி நிலவரம் :   70  சதவிகிதம் வாக்குப்பதிவு, 4 கோடி பேர் வாக்களிப்பு   – Kumudam

    கூட்டத்தில் சிக்கிய நடிகை நிதி அகர்வால்: அத்துமீறிய ரசிகர்கள்  – Kumudam

    • By admin
    • April 23, 2026
    • 19 views
    கூட்டத்தில் சிக்கிய நடிகை நிதி அகர்வால்: அத்துமீறிய ரசிகர்கள்  – Kumudam

    தமிழக சட்டமன்ற வாக்குப்பதிவு நிறைவு: கடந்த தேர்தலை விட கூடுதல் வாக்கு பதிவாக சாதனை  – Kumudam

    • By admin
    • April 23, 2026
    • 5 views
    தமிழக சட்டமன்ற வாக்குப்பதிவு நிறைவு: கடந்த தேர்தலை விட கூடுதல் வாக்கு பதிவாக சாதனை  – Kumudam

    சட்டமன்ற தேர்தல் வாக்கு பதிவு விறுவிறு : 1 மணி வரை 56.81 சதவிகிதம் வாக்கு பதிவு  – Kumudam

    • By admin
    • April 23, 2026
    • 8 views
    சட்டமன்ற தேர்தல் வாக்கு பதிவு விறுவிறு : 1 மணி வரை 56.81 சதவிகிதம் வாக்கு பதிவு  – Kumudam
    .site-info { display: none; }