கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
“தமிழ்நாடு வாக்களித்துவிட்டது, மே 4 தமிழ்நாடு வெல்லும்” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக 84.69% வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் “மே 4 தமிழ்நாடு வெல்லும்” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கும் நடந்து முடிந்துள்ளது. இரவு எட்டு மணி நிலவரப்படி இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி தமிழ்நாட்டில் 84.69% வாக்குகள் பதிவாகியுள்ளன.
குறிப்பாக இந்தியா சுதந்திரம் பெற்ற பின் நடந்த தேர்தல்களில் இவ்வளவு சதவிகித வாக்குகள் பதிவாகவில்லை எனவும், இதுவே முதல்முறை எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதேபோல், மேற்குவங்கத்தில் இன்று நடந்த முதற்கட்ட வாக்குப் பதிவில் இரவு 8 மணி வரை 91.78% வாக்குகள் பதிவாகியுள்ளன. இதுவும் வரலாற்றில் முதல் முறை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், “ஜனநாயகத் திருவிழா; சாதனை வாக்குப்பதிவு. பாராட்டுக்குரிய மக்களின் பொறுப்புணர்வு!
#TNElections2026 ஜனநாயகத் திருவிழா: சாதனை வாக்குப்பதிவு; பாராட்டுக்குரிய மக்களின் பொறுப்புணர்வு!
🗳️ எப்போதும் போல பெரிய அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது தமிழ்நாடு தேர்தல்.🗳️ 84.69% என்ற சாதனை அளவில் வாக்களித்து, ஜனநாயகத்தைப் பாதுகாத்திடும்… pic.twitter.com/q4rS5PuUDU
— M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) ஏப்ரல் 23, 2026
எப்போதும் போல பெரிய அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது தமிழ்நாடு தேர்தல். 84.69% என்ற சாதனை அளவில் வாக்களித்து, ஜனநாயகத்தைப் பாதுகாத்திடும் கடமையைத் தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் சரிவர ஆற்றியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பலர் நீண்ட தூரம் பயணித்து வந்து வாக்களித்து விட்டு, இன்றிரவே மீண்டும் கிளம்பி, அவரவர் பணியாற்றும் ஊர்களுக்குச் செல்கின்றனர். “ஒரு வாக்குதானே” என எண்ணாமல், “ஒரு தலைமுறைக்கான தேர்தல் இது” என்ற நினைப்பே இந்த உந்துதலுக்குக் காரணமாக இருக்க முடியும்.
அத்தகைய பொறுப்புள்ள குடிமக்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள். தமிழ்நாடு வாக்களித்துவிட்டது, மே 4 தமிழ்நாடு வெல்லும்” எனத் தெரிவித்துள்ளார்.