கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
திமுகவுடனான தொகுதி பங்கீடு மூலம் மனநிறைவோடும் மகிழ்ச்சியோடும் இருப்பதாக தெரிவித்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மாநிலங்களவை வேட்பாளர் குறித்து காங்கிரஸ் தலைமை அறிவிக்கும் என்றார்.
காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் குறித்து தேசிய தலைமை அறிவிக்கும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
திமுக – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கிடு ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், காங்கிரஸுக்கு 28 சட்டமன்ற தொகுதிகள், ஒரு மாநிலங்களவை இடத்தை திமுக ஒதுக்கியுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் சூழலில் கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் திமுக தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் காங்கிரஸ் கட்சியில் சில தலைவர்கள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என முழக்கம் எழுப்பி வந்ததால் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்தது.
இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தேசியத் தலைமை தலையிட்டு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அனுப்பியது.
இந்நிலையில் நீண்ட இழுபறிக்கு பின்னர் திமுக – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் திமுக தரப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அதேபோல், காங்கிரஸ் தரப்பில் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
அதன்படி, வரும் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் 1 மாநிலங்களவை இடத்தை திமுக ஒதுக்கியுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு கையெழுத்தான நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தொகுதி பங்கீட்டில் மனநிறைவோடு இருப்பதாக தெரிவித்தார். காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் யார் என்பது விரைவில் எங்களுடைய அகில இந்திய தலைமை அறிவிக்கும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
அதேநேரம் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியை சேர்ந்த அ.செல்லக்குமார், மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி மற்றும் மீனாட்சி நடராஜன் உள்ளிட்டோரில் ஒருவருக்கு தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை வேட்பாளராக அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் கிரிஸ்டோபர் திலக் என்பவரின் பெயரும் தற்போது காங்கிரஸ் மாநிலங்களவை இடத்திற்கு பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் திருச்சியை சேர்ந்தவர். தற்போது மணிப்பூர், நாகாலாந்து பொறுப்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மார்ச் 04, 2026 10:23 PM IST