கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
தவெக தலைவர் விஜய் கன்னியாகுமரியில் மீனவர்களுக்கு படகு கடன் நிவாரணமாக ரூ 5 லட்சம், ஆண்டு தடை கால நிதி உயர்வு, வீட்டு வசதி வாரியம், டீசல் மானியம் உயர்வு உள்ளிட்டவை குறித்து வாக்குறுதிகளை அறிவித்தார்.
தவெக தலைவர் விஜய், கன்னியாகுமரி மாவட்டம், மகாதானபுரம் சந்திப்பில் தனது பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு அங்கிருந்து நேராக ஜீரோ பாயிண்ட் பகுதியில் தனது பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
ஜீரோ பாயிண்ட் பகுதியில் பேசிய விஜய், “மீனவர்களுக்காக மூன்று அறிவிப்புகளை வெளியிடுகிறேன். உங்களின் மீனவன் நண்பன் நான் வாசிக்கிறேன். மீனவர் பாதுகாப்பு உரிமைத் தொகை; ஆண்டு மீன்பிடி தடை காலத்திற்கான மீனவர் பாதுகாப்பு நிதி ரூ. 8000 என்பதில் இருந்து ரூ. 20 ஆயிரமாக உயர்த்தப்படும்.
படகு பாதுகாப்பு நிதி; படகுகளை விடுவிப்பது குறித்து தூதரக வழிகளில் பேச்சுவார்த்தை நடத்தும் வரையில், வங்கிக் கடன்களை திருப்பி செலுத்தவும், மீனவர் குழுக்களுக்கு ஆதரவு அளிக்கவும் படகு உரிமையாளர்களுக்கு ரூ. 5 லட்சம் உடனடி இடைக்கால நிவாரணம் வழங்கப்படும்.
கடல் தாய் வீட்டு வசதி திட்டம்; கடலோர பகுதிகளில் உள்ள அனைத்து குடிசைகளையும், சிதிலமடைந்த குடியிருப்புகளையும் அகற்றி, புயல்களை தாங்கக்கூடிய காலநிலை மாற்றத்தை வீடுகளை தாங்கும் வகையில் தனி வீட்டு வசதி வாரியம் அமைக்கப்படும்.
இயந்திர படகுகளுக்கான மானிய டீசல் ஒதுக்கீடு மாதாந்திரம் 1,800 லிட்டரில் இருந்து 3,500 லிட்டராக உயர்த்தப்படும். ஒரு லிட்டருக்கு ரூ. 15 எனும் நிலையான மானியம் படகு உரிமையாளரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.” இவ்வாறு பேசினார்.