கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ஏப்ரல்18 ஆம் தேதி தமிழ்நாடு வரும் ராகுல் காந்தி, ஒரே நாளில் மூன்று இடங்களில் பரப்புரை மேற்கொள்கிறார்.
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள தமிழ்நாட்டிற்கு வருகிறார்.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. என்.டி.ஏ. கூட்டணியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள பாஜகவின் பல்வேறு மாநிலத் தலைவர்களும், பிரதமர் நரேந்திர மோடியும் தமிழ்நாட்டிற்கு வருகை தந்துவருகின்றனர். ஆனால், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் முக்கிய தேசிய கட்சியான காங்கிரஸின் முக்கிய தலைவர் ராகுல் காந்தி ஏன் வரவில்லை, அந்தக் கூட்டணியில் சலசலப்பு என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தன.
இந்நிலையில், காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, வரும் ஏப்ரல் 18ஆம் தேதி தமிழ்நாடு வரவுள்ளார். அன்றைய தினம் பொன்னேரி, சோளிங்கர் மற்றும் துறையூரில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டவுள்ளார்.
அதேபோல, மீண்டும் வரும் திங்கட்கிழமை அவர் தமிழ்நாடு வர இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருநாட்கள் பயணமாக நாளை மறுநாள் தமிழ்நாடு வரும் காங்கிரஸ் தேசியத் தலைவர் கார்கே, நாளை மறுநாள் திருநெல்வேலியிலும், திங்கள் அன்று கன்னியாகுமரியிலும் பரப்புரை செய்ய திட்டமிட்டுள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தல் களம் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ள நிலையில், தேசிய தலைவர்கள் தமிழ்நாட்டை நோக்கி வருவது கவனம் பெற்றுள்ளது.
ஏப்ரல் 16, 2026 10:13 PM IST