கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
விளாத்திகுளம் சிறுமியின் புகைப்படம் மற்றும் பெயரை வாட்ஸ்அப் உட்பட சமூக வலைதளங்களில் பரப்பவோ அல்லது பதிவிடவோ கூடாது என மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பாலியல் வன்கொடுமை செய்து சிறுமியின் சடலம் துண்டு துண்டாக மீட்பு என பரவிய செய்தி தொடர்பாக மாவட்ட காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
சம்பவ இடத்தில் சிறுமியின் சடலம் முழுமையாக கண்டெடுக்கப்பட்டது எனவும் உடற்கூராய்வு அறிக்கை மற்றும் தடய அறிவியல் நிபுணர்களின் விசாரணை அறிக்கைக்கு பின்பே பாலியல் குற்றம் நிகழ்ந்துள்ளதா என தெரியவரும் என்றும் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. மேலும் சிறுமியின் புகைப்படம் மற்றும் பெயரை வாட்ஸ்அப் உட்பட சமூக வலைதளங்களில் பரப்பவோ அல்லது பதிவிடவோ கூடாது என மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் கடந்த 10.03.2026 அன்று மாலை அவரது வீட்டை விட்டு வெளியே சென்று வீடு திரும்பாத நிலையில் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் குளத்தூர் காவல் நிலைய போலீசார் சிறுமி காணவில்லை என வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் சிறுமியின் சடலம் அங்குள்ள காட்டுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் சிறுமியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவ இடத்தில் தடய அறிவியல் நிபுணர்கள் உட்பட காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டும் வருகின்றனர்.
சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, சடலம் துண்டு துண்டாக மீட்கப்பட்டது என தவறான தகவல் பரவியது தொடர்பாக மாவட்ட காவல்துறை மறுப்பு தெரிவித்ததுடன், மேற்படி சம்பவ இடத்தில் சிறுமியின் உடல் முழுமையாக கண்டெடுக்கப்பட்டதாகவும், பாலியல் வன்கொடுமையால் சிறுமி பாதிக்கப்பட்டுள்ளாரா என உடற்கூராய்வு அறிக்கை மற்றும் தடய அறிவியல் நிபுணர்களின் விசாரணை அறிக்கைக்கு பின்பே தெரியவரும் எனவும் விளக்கம் அளித்துள்ளது.
மேலும், இதுபோன்ற சம்பவத்தில் காவல்துறை விசாரணையில் உள்ள நிலையில், விசாரணை முடிவின் உண்மைத்தன்மை தெரியாமல் உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்டு, பொதுமக்களிடையே தேவையற்ற குழப்பத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்த வேண்டாம் எனவும், சிறுமியின் அடையாளத்தை காட்டும் விதமாக சிறுமியின் புகைப்படம் மற்றும் பெயரை யாரும் வாட்ஸ்அப் உட்பட சமூக வலைதளங்களில் பரப்பவோ அல்லது பதிவிடவோ கூடாது எனவும், மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மார்ச் 12, 2026 10:39 PM IST